ஐக்கியப் பேரரசு, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 40 நாடுகளில் பிரத்யேக பொருளாதாரத் தகவல் பரப்புரை திட்டங்களை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியச் சரக்குகள் மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிக்கு மத்தியில், ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தியத் தொழில்துறையின் முன்னணிப் பங்களிப்போடு, தரமான, நிலையான மற்றும் புதுமையான ஜவுளிப் பொருட்களின் நம்பகமான விநியோக நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, இலக்கு சார்ந்த அணுகுமுறையைத் தொடர்வதற்காக இது முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே 220க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றாலும், 40 இறக்குமதி செய்யும் நாடுகள் பல்வகைப்படுத்தலுக்கான உண்மையான வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
இந்த 40 நாடுகளும் சேர்ந்து, ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதியில் 590 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளன.
2024-25 ஆம் ஆண்டில், ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் ஒட்டு மொத்த அளவு 179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 142 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டு சந்தையையும், 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியையும் கொண்டுள்ளது.
உலக அளவில், ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதிச் சந்தை 2024 ஆம் ஆண்டில் 800.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
உலக வர்த்தகத்தில் 4.1 சதவீதப் பங்கைக் கொண்ட இந்தியா, ஆறாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது.