மாணவர் மனநலம் குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்
July 30 , 2025 2 days 49 0
உச்ச நீதிமன்றமானது, அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் மற்றும் மனநல நெருக்கடிகளைச் சமாளிக்க 32 மற்றும் 141வது சரத்துகளின் கீழ் 15 இடைக்காலமான கட்டாய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்த வழிகாட்டுதல்கள் சுக்தேப் சாஹா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு இடையிலான வழக்கின் போது வழங்கப்பட்டது.
இந்த நெருக்கடியை இந்தியாவின் கல்வி முறையில் "கட்டமைப்புச் சீர்குலைவு" என்பதற்கான அறிகுறியாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
2022 ஆம் ஆண்டில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்தன, அவற்றில் 2,200 தேர்வில் தோல்வி அடைந்தததுடன் தொடர்புடையவை (தேசிய குற்றப் பதிவு வாரியம்).
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் UMMEED (புரிதல், ஊக்குவித்தல், நிர்வகித்தல், பச்சாதாபம், அதிகாரமளித்தல், மேம்படுத்துதல்), MANODARPAN (கல்வி அமைச்சகத்தின் மனநல முன்னெடுப்பு) மற்றும் தேசியத் தற்கொலை தடுப்பு உத்தி போன்ற தேசிய திட்டங்களுடன் இணைக்கப்பட்ட மனநலக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்.
100+ மாணவர்களைக் கொண்ட நிறுவனங்களில் குறைந்தது ஒரு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரையாவது கட்டாயமாக நியமிக்க வேண்டும்.
குழு பிரிப்பு, பொதுவெளி அவமானம் மற்றும் நடைமுறைக்கு மாறான கல்வி இலக்குகள் போன்ற நடைமுறைகள் கட்டாயமாக தடை செய்யப் பட்டுள்ளன.
Tele-MANAS (மாநிலங்கள் முழுவதும் தொலைபேசி வழியான மனநல உதவி மற்றும் வலையமைப்பு) உள்ளிட்ட உதவி எண்கள் வளாகங்கள் மற்றும் விடுதிகளில் தெரியும் படி காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
நெருக்கடி நிலை மீட்பு மற்றும் முன் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மனநலப் பயிற்சி கட்டாயம் ஆகும்.
நிறுவனங்கள் SC, ST, OBC, EWS, LGBTQ+ மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உள்ளடக்கிய, பாகுபாடற்ற ஆதரவை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் வன்கொடுமை, கேலிவதை மற்றும் உருவக் கேலி அடிப்படையிலான பாகுபாட்டை உடனடி உளவியல் உதவியுடன் புகாரளிக்க இரகசிய அமைப்புகள் இருக்க வேண்டும்.
சத்ருகன் சவுகான் மற்றும் இந்திய ஒன்றியம இடையிலான வழக்கில் உறுதிப்படுத்தப் பட்டபடி, கண்ணியம் மற்றும் சுயாட்சியை உள்ளடக்கிய வாழ்க்கைக்கான அரசியலமைப்பு உரிமையின் ஒரு பகுதியாக மனநலம் உள்ளது.