பிரதமருக்கான பொருளாதார ஆலோசக சபையின் தலைவர் டாக்டர். பிபேக் தேப்ராய் 2021 ஆம் ஆண்டு முதியோர்களுக்கான வாழ்க்கைத் தரக் குறியீட்டினை வெளியிட்டார்.
இந்தக் குறியீடானது இந்தியாவில் முதியோர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி மதிப்பிடுகிறது.
இது போட்டித்திறன் கல்வி நிறுவனத்தினால் (Institute for Competitiveness) உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இந்திய மாநிலங்களின் மக்களுடைய முதுமை எய்தலின் பிராந்திய ரீதியிலான பாங்கினை அடையாளம் கண்டு, இந்தியாவினுடைய முதியோர் மக்கள்தொகையின் ஒட்டு மொத்த நல்வாழ்வையும் மதிப்பீடு செய்கிறது.
இக்குறியீடானது, நிதியியல் ரீதியிலான நல்வாழ்வு, சமூக நல்வாழ்வு, சுகாதார அமைப்பு மற்றும் வருமான இழப்பின்மை நிலை போன்ற நான்கு முக்கிய களங்களிலுள்ள 45 வெவ்வேறு குறிகாட்டிகளை மதிப்பீடு செய்கிறது.
இந்த 4 களங்களில் சுகாதார அமைப்புக் களமானது (domain of Health System) 66.97 என்ற அளவில் அதிகபட்ச தேசிய சராசரியையும், அதனைத் தொடர்ந்து சமூக நல்வாழ்வு (62.34), நிதியியல் ரீதியிலான நல்வாழ்வு (44.7) மற்றும் வருமானம் இழப்பின்மை நிலை (33.03) போன்ற குறியீடுகளும் உயர்வைக் கண்டுள்ளன.
இந்தக் குறியீடானது அதிக முதியோரைக் கொண்ட மாநிலங்கள், ஒப்பீட்டளவில் முதியோரைக் கொண்ட மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய 4 பிரிவுகளில் முதியோர்களுக்கான வாழ்க்கைத் தரக் குறியீட்டை வழங்குகிறது.
அதிக முதியோரைக் கொண்ட மாநிலங்கள் பிரிவில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஒப்பீட்டளவிலான முதியோரைக் கொண்ட மாநிலங்கள் பிரிவில் (Relatively Aged States) இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதிக முதியோரைக் கொண்ட மாநிலங்கள் என்ற பிரிவானது 5 மில்லியனுக்கும் மேற்பட்ட முதியோரைக் கொண்டுள்ள மாநிலங்களாகும்.
ஒப்பீட்டளவில் முதியோரைக் கொண்ட மாநிலங்கள் பிரிவானது 5 மில்லியனுக்கும் குறைவான முதியோர்களைக் கொண்டுள்ள மாநிலங்களாகும்.
சண்டிகர் மற்றும் மிசோரம் ஆகியவை முறையே ஒன்றியப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிங்கள் ஆகிய பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.
ஒன்றியப் பிரதேசப் பிரிவில், ஜம்மு & காஷ்மீர் குறைவான மதிப்பைப் பெற்றுள்ளது.
வடகிழக்குமாநிலங்கள் பிரிவில், அருணாச்சலப்பிரதேச மாநிலமானது குறைவான மதிப்பைப் பெற்றுள்ளது.
அதிக முதியோரைக் கொண்ட மாநிலங்கள் பிரிவில் தெலுங்கானா மாநிலமானது குறைவான மதிப்பைப் பெற்றுள்ளது.
ஒப்பீட்டளவில் முதியோரைக் கொண்டுள்ள மாநிலங்கள் பிரிவில் குஜராத் மாநிலமானது கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.