மூன்றாவது ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது
January 20 , 2018 2736 days 902 0
ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பரவாமல் தடுப்பதற்குண்டான 42 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பான ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் (Australia Group) இந்தியா இணைந்துள்ளது.
ஆஸ்திரேலிய கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்துள்ள முதலாவது தெற்காசிய நாடு இந்தியாவே ஆகும். இவ்வமைப்பில் சீனா உறுப்பினராக இல்லை.
ஆயுதங்கள் பரவாமல் தடுப்பதில் இந்தியாவினுடைய பங்கிற்கும் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும் கிடைக்கப் பெற்ற அங்கீகாரமாக, இந்தக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது பார்க்கப்படுகிறது. இந்தியா இதில் 43வது உறுப்பினராக முறைப்படியாக இணைந்துள்ளது.
ஆயுதங்கள் பரவாமல் தடுப்பதற்காக உள்ள உலகின் நான்கு ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்புகளில் மூன்றில் இந்தியா உறுப்பினராக இணைந்துள்ளது. மற்றிரண்டும் 35 உறுப்பினர்களைக் கொண்ட ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு (Missile Technology Control Regime) மற்றும் 42 உறுப்பினர்களைக் கொண்ட வாசினார் கூட்டமைப்பு (Wassenaar Arrangement) ஆகியவை ஆகும்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Non-Proliferation Treaty) கையெழுத்திடாமல் இருந்தாலும் ஆயுதப் பரவல் தடுப்புத் தளத்தில் இந்தியாவின் நிலை உயருவதற்கு இந்த அமைப்பினுள் இணையப் பெற்றது உதவிகரமாக இருக்கும். மேலும் இது முக்கியமான அதிநவீனத் தொழில் நுட்பங்களைப் பெறுவதற்கும் உதவி புரியும்.
ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு
இது முறைப்படி அமையப் பெறாத பன்னாட்டு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பாக 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கச் செய்து அவற்றிற்கு ஒத்திசைவு பெறுவதன் மூலம் அரசுகள் அல்லது தீவிரவாதக் குழுக்களால் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படக் கூடிய பொருள்கள், சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவை பரவுவதைத் தடுப்பதற்காக இக்கூட்டமைப்பு பணியாற்றுகிறது.
தற்போது இந்த அமைப்பு 43 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சீனா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் இதில் உறுப்பினராக இல்லை.