TNPSC Thervupettagam

மேக்கிரிகோர் நினைவுப் பதக்கங்கள் – இந்தியா

April 30 , 2025 17 hrs 0 min 4 0
  • இது இராணுவ உளவு மற்றும் சாகசப் பணிகளில் மகத்தான பங்களிப்புகளை ஆற்றிய வீரர்களை அங்கீகரிக்கும் ஒரு மதிப்புமிக்க விருதாகவும், இந்திய ஆயுதப் படைகளில் வழங்கப்படும் கௌரவச் சின்னமாகவும் விளங்குகிறது.
  • 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஐந்து இராணுவ வீரர்களுக்கு அவர்களின் பெரும் சாதனைகளுக்காகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
  • இந்த விருதானது தேசியப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களை ஊக்குவிக்கிறது.
  • இராணுவ உளவு மற்றும் ஆய்வு ஆகியவை இந்தப் பதக்கத்திற்கான முதன்மையான ஒரு அளவுருவாக இருந்தாலும், இந்தப் பதக்கமானது ஆயுதப் படைகள், பிராந்திய இராணுவம், சேமப் படைகள், இராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகிய அனைத்துப் பிரிவுகளின் அனைத்து நிலைப் பதவியினருக்கும் (பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற) வழங்கப்படுகிறது.
  • 1888 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்த மேக்ரிகோர் நினைவுப் பதக்கமானது, இந்திய ஒருங்கிணைந்தப் படைகள் நிறுவனத்தின் (USI) (1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) நிறுவனரான மேஜர் ஜெனரல் சர் சார்லஸ் மெட்கால்ஃப் மெக்ரிகோரை நினைவு கூருகிறது.
  • முதலில் இராணுவ உளவு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்ட இந்தப் பதக்கமானது, சுதந்திரத்திற்குப் பிறகு 1986 ஆம் ஆண்டில் பின்னர் ராணுவச் செயல்பாடு சார் பயணங்கள் மற்றும் சாகச நடவடிக்கைகளுக்கும் வழங்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட சுமார் 103 பதக்கங்கள் உட்பட இன்று வரை 127 பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்தப் பதக்கமானது கேப்டன் F.E. யங்ஹஸ்பாண்ட் (1890), மேஜர் ஜெனரல் ஆர்டே சார்லஸ் விங்கேட் (1943), மேஜர் Z.C. பக்ஷி (1949), சியாச்சின் பனிப்பாறை ஆய்வுக்காக கர்னல் நரிந்தர் குமார் (1978–81) மற்றும் தனித்த உலகப் பயணத்திற்காக கமாண்டர் (படைத் தளபதி) திலீப் டோண்டே மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் (படைத் துணைத் தளபதி) அபிலாஷ் டோமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தப் பதக்கத்தினைப் பெற்றவர்களில் விமானப் படையைச் சேர்ந்த விமானப் படைத்தளபதி D. பாண்டா மற்றும் கடற்படையைச் சேர்ந்த விமான மின்னியல் பராமரிப்பாளர் (ரேடியோ) கீழ்நிலை அதிகாரி ராகுல் குமார் பாண்டே ஆகியோர் அடங்குவர்.
  • 2024 ஆம் ஆண்டில், கடற்படையின் தலைமை விமான மின்னியல் பராமரிப்பாளர் (ரேடியோ) ராம் ரத்தன் ஜாட் மற்றும் விமானப்படை கீழ்நிலை அதிகாரி ஜுமர் ராம் பூனியா ஆகியோர் இந்தப் பதக்கத்தினைப் பெற்றனர்.
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டுகள் கழகத்தின் இயக்குநர் கர்னல் ரன்வீர் சிங் ஜம்வால் அவர்களுக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • இந்த முக்கிய நிகழ்வில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா (ஓய்வு) எழுதிய நைப் சுபேதார் சன்னி லாலின் வாழ்க்கை மற்றும் வீரப் பயணத்தினை எடுத்துரைக்கும் Bravest of the Brave என்ற ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்