ஈரநிலங்கள் மீதான ராம்சர் உடன்படிக்கைக்கான ஒப்பந்ததார நாடுகளின் 15வது மாநாடு (COP15) ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் நடைபெற்றது.
மொத்தம் 172 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன.
இந்த மாநாட்டின் கருத்துரு, "Protecting Wetlands for Our Common Future" என்பதாகும்.
ஜிம்பாப்வே நாடானது ராம்சர் உடன்படிக்கையின் மூன்று ஆண்டு கால சுழற்சி முறை தலைமைப் பொறுப்பை சீனாவிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.
உலகளாவிய ஈரநில மறுசீரமைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக விக்டோரியா நீர்வீழ்ச்சி பிரகடனம் தொடங்கப்பட்டது.
ஈரநிலங்கள் ஆனது பூமியின் மேற்பரப்பில் 6 சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கி இருந்தாலும், அதன் சேவைகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.5 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஈரநிலக் கண்ணோட்ட அறிக்கையின் சிறப்பு பதிப்பு ஆனது, 2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் மீதமுள்ள ஈரநிலங்களில் ஐந்தில் ஒரு பங்கு மறைந்துவிடும் என்று எச்சரித்தது.
இந்த இழப்பு சுமார் 39 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (USD) என மதிப்பிடப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த சேவை இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியா தற்போது 1.36 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான 91 ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.
இது ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பாதுகாக்கப்பட்ட ஈரநில வலையமைப்பை உருவாக்குகிறது.
கூடுதலாக, இந்தூர் மற்றும் உதய்ப்பூர் ஆகியவை ஈரநில நகரங்களாக புதிதாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
இந்தியாவின் குடிமக்கள் பங்கெடுப்பு வகையிலான முயற்சிகளான சஹ்பாகிதா திட்டம் மற்றும் சேவ் வெட்லேண்ட்ஸ் பிரச்சாரம் ஆகியவை ஈரநில விழிப்புணர்வு மற்றும் வளங்காப்பிற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் திரட்டி உள்ளன.
COP15 உலகளாவிய ஈரநில மறுசீரமைப்பு நிதியை உருவாக்குவதற்கும், தேசியப் பருவநிலை மற்றும் மேம்பாட்டுச் செயல்பாட்டு நிரல்களில் ஈரநிலக் கொள்கைகளை வலுவாக ஒருங்கிணைப்பதற்கும் அழைப்பு விடுத்தது.
நீண்டகாலப் பாதுகாப்பு இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் கரீபியன் உள்ளிட்ட பிராந்திய குழுக்களின் உள்ளீடுகளுடன் உத்தி சார் திட்டம் 2025–2034 விவாதிக்கப்பட்டது.