TNPSC Thervupettagam

வக்ஃப் திருத்த மசோதா 2025

April 6 , 2025 25 days 155 0
  • மாநிலங்களவையில் சுமார் 14 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 95 பேர் எதிராகவும் வாக்களித்ததுடன் 2025 ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்த) மசோதாவினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 232 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்ததுடன் அது மக்களவையில் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • இதற்கு ஏப்ரல் 05 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
  • கடந்த ஆண்டு, இந்த மசோதாவானது ஜக்தம்பிகா பால் தலைமையிலான ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழுவிற்கு (JPC) பரிசீலனைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்தப் புதிய மசோதாவானது, இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தினை நிர்வகிக்கும் 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தினைத் திருத்தியமைக்க முயல்கிறது.
  • இது பாரம்பரியத் தளங்கள் மற்றும் தனிப்பட்ட சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் வக்ஃப் சொத்து நிர்வாகத்தினையும் நெறிப்படுத்துகிறது.
  • வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அதற்காக நியமிக்கப்பட்ட இணைய தளத்தில் உடன் பதிவேற்றப்பட வேண்டும்.
  • கூடுதலாக, இனி எந்தவொரு புதிய வக்ஃப் சொத்துப் பதிவுகளும் இந்த இணைய தளம் மூலம் அந்தந்த வக்ஃப் வாரியங்களுக்கு வேண்டி பிரத்தியேகமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • வக்ஃப் சட்டத்தின் 40வது பிரிவு, ஒரு சொத்து வக்ஃப் சொத்தா என்பதை முடிவு செய்ய வக்ஃப் வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • வக்ஃப் தீர்ப்பாயத்தினால் அது ரத்து செய்யப் படாவிட்டால் அல்லது மாற்றப்படா விட்டால் அந்த வாரியத்தின் முடிவே இறுதியானது.
  • தற்போது வக்ஃப் தீர்ப்பாயத்திடம் உள்ள இந்த அதிகாரத்தினை இந்த மசோதாவானது மாவட்ட ஆட்சியருக்கும் வழங்குகிறது.
  • சட்டம் அமலுக்கு வரும் முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கச் சொத்தும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது.
  • 1995 ஆம் ஆண்டு சட்டம் ஆனது, மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு ஆணையரால் அவுகாஃப் (வக்ஃப் என்பதன் பன்மை) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
  • திருத்த மசோதா, கணக்கெடுப்பு ஆணையருக்குப் பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் அதிகாரப் பூர்வமாக என்று பரிந்துரைக்கப்பட்ட துணை ஆட்சியர் பதவிக்குக் குறையாத வேறு ஓர் அதிகாரியை நிர்ணயிக்கிறது.
  • இந்தப் புதிய மசோதாவானது மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களுக்கு என்று ஒரு முஸ்லிம் அல்லாத தலைமை நிர்வாக அதிகாரியையும், குறைந்தது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டி மாநில அரசிற்கு அதிகாரமளிக்க முன்மொழிகிறது.
  • 1963 ஆம் ஆண்டு வரம்பு நிர்ணயச் சட்டம் வக்ஃப் சொத்துக்களுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடும் 1995 ஆம் ஆண்டு சட்டத்தின் 107வது பிரிவினை நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்