வங்கியியல் ஒழுங்குமுறை (திருத்தம்) மசோதா, 2020 ஆனது ஜுன் 26 அன்று அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்கு மாற்றாக இந்திய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்த மசோதாவானது வங்கியியல் ஒழுங்கு முறைச் சட்டம், 1949 என்ற சட்டத்தின் மீதான திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றது.
இந்தப் புதிய மசோதாவானது கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI - Reserve Bank of India) கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகின்றது.
சிறப்பம்சங்கள்
வங்கியியல் நிறுவனங்களுக்குப் பொருந்தும் அனைத்து விதிகளும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்த இருக்கின்றது.
இது எந்தவொரு வங்கியியல் செயல்பாடுகளையும் பாதிக்காத வண்ணம் பொது மக்களின் நலம், வங்கியியல் முறை, வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் வங்கியியல் நிறுவனங்களின் சரியான மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக வேண்டி ஒரு திட்டத்தை மேம்படுத்த மத்திய வங்கிக்கு உதவ இருக்கின்றது.
இந்தத் திருத்தங்கள் பங்கு மூலதனம், முன்னுரிமைப் பத்திரங்கள், பாதுகாப்பற்ற கடன் பத்திரங்களைக் கொண்டு பொது வெளியீடுகள் மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம் நிதியைத் திரட்டவும் கூட்டுறவு வங்கிகளை அனுமதிக்க இருக்கின்றது.
விதிவிலக்குகள்
இது மாநிலச் சட்டங்களின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளர்களின் தற்போதைய அதிகாரங்களைப் பாதிக்காது.
தனது முதன்மையான நோக்கம் மற்றும் முதன்மையான வணிகம் என்பது “வேளாண் மேம்பாட்டிற்கு நீண்ட கால நிதியுதவியை அளிப்பதாகக் கொண்டுள்ள மற்றும் “வங்கி”, ”வங்கியாளர்”, ”வங்கியியல்” என்ற சொற்கூற்றைப் பயன்படுத்தாத முதன்மை வேளாண் கடன் வழங்கல் சமூகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களுக்கு இது பொருந்தாது.