வர்த்தக வசதி வழங்குதல் குறித்த மதிப்பீட்டு ஆய்வு – இந்தியா
July 28 , 2021 1510 days 523 0
ஐக்கிய நாடுகள் அவையினால் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக வசதி வழங்குதல் குறித்த ஆய்வில் இந்தியாவின் மதிப்பானது கணிசமான அளவில் மேம்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி வழங்குதல் குறித்த உலகளாவிய மதிப்பீட்டில் இந்தியா 90.32 சதவீத மதிப்பினைப் பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இருந்த 78.49 சதவீதத்திலிருந்து இந்தியா தற்போது முன்னேறி உள்ளது.
143 நாடுகள் மதிப்பிடப்பட்ட இந்த ஆய்வில் (2021) அனைத்து ஐந்து குறிகாட்டிகளிலும் இந்தியாவின் மதிப்பு முன்னேற்றம் கண்டுள்ளது.
அந்த ஐந்து குறிகாட்டிகள் வெளிப்படைத்தன்மை, முறைமைகள், நிறுவனம் சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு, காகிதமில்லா வர்த்தகம் மற்றும் எல்லைகளுக்கிடையில் காகிதமில்லா வர்த்தகம் ஆகியனவாகும்.
2021 ஆம் ஆண்டில் வெளிப்படைத் தன்மை என்ற குறிகாட்டியில் இந்தியா 100 சதவீத மதிப்பைப் பெற்றுள்ளது.
இந்த மதிப்பீட்டு ஆய்வானது ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது.
ஒரு நாடு பெறும் அதிக மதிப்பானது அதன் முதலீட்டு முடிவுகளில் வணிகர்களுக்கு உதவும்.