இந்தியச் செயற்கைக்கோள் திரள் மூலமான வழி செலுத்தல் (NavIC) தரவு பெறும் அமைப்புகளுக்கான விரிவான தரநிலைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரோ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட NavIC, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பாகும், இது பிராந்திய துல்லியத்தை உறுதி செய்கிறது.
NavIC மூலம் இயக்கப்பட்ட சாதனங்களில் சமிஞ்ஞை தரம், நிலை நிறுத்துதல் துல்லியம் மற்றும் நேர துல்லியத்திற்கான வழிகாட்டுதல்களை இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) வெளியிட்டது.
NavIC ஆனது L1, L5 மற்றும் S கற்றைகளில் சீர்நிலை நிலை நிறுத்தல் சேவை (SPS) சமிக்ஞைகளை வழங்குகிறது என்பதோடு, இது 1.5 மீட்டர் துல்லியம் மற்றும் 50-நானோ வினாடி நேர துல்லியத்தை உறுதி செய்கிறது.
NavIC இரண்டு நிலை சேவைகளை வழங்கும் என்ற நிலையில், இதில் "நிலையான நிலைப்படுத்தல் சேவை" என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்திருக்கும் என்பதோடு "கட்டுப்படுத்தப் பட்ட சேவை" (குறியாக்கப்பட்ட ஒன்று) என்பது அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு (இராணுவம் உட்பட) பயன்படும்.
NavIC தொழில்நுட்பத்தை தரப்படுத்துவதன் மூலம், இந்தியா அதன் சொந்த செயற்கைக் கோள் வழிசெலுத்தல் அமைப்பை இயக்குவதில் அமெரிக்கா (GPS), ஐரோப்பிய ஒன்றியம் (கலிலியோ), ரஷ்யா (GLONASS) மற்றும் சீனா (BeiDou) போன்ற உலகளாவிய சக்திகளுடன் இணைகிறது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையால் கட்டுப்படுத்தப்படும் GPS போலல்லாமல், NavIC இந்தியாவில் உள்ள குடிமை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது.