உலக வங்கியின் வியாபாரத்தை எளிமையாக்கிய நாடுகள் (ease of doing business) பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 10 மதிப்பீடுகளில் 6 மதிப்பீடுகளில் முன்னேறியதன் மூலம் இந்தியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது.
திவால், வரி விதிப்புகள் மற்றும் பிற விஷயங்கள் தொடர்பான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியதன் காரணமாக இரண்டாவது வருடமாக இந்தியா இந்த தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு உலக வங்கியின் வியாபாரத்தை எளிமையாக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் இருந்தது. இந்தியா 2016 ஆம் ஆண்டில் 131-வது இடத்தில் இருந்தது.
மொத்தம் 190 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக்கா 8-வது இடத்திலும் சீனா 46-வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 136-வது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் முதல் 10 நாடுகள் கொண்ட பட்டியலில் உலக வங்கியானது இந்தியாவை இணைத்துள்ளது.