பிப்ரவரி 5 அன்று, புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (புதிய ஸ்டார்ட்) அதிகாரப் பூர்வமாக காலாவதியானது.
இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அணு ஆயுதக் கிடங்குகளைக் கட்டுப்படுத்தும் வகையான கடைசியாக எஞ்சியிருந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் முடிவைக் குறித்தது ஆகும்.
புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம், 2000-களின் பிற்பகுதியில் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கும் ஒரு காலகட்டத்தில் உருவானது.
அதன் முன்னோடியான ஸ்டார்ட் I, 1991 இல் கையெழுத்திடப்பட்டு, டிசம்பர் 2009 இல் காலாவதியானது.
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது ரஷ்யப் பிரதிநிதி டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோருக்கு இடையே லண்டனில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, ஏப்ரல் 2009 இல் முந்தையதின் தொடர்ச்சியான ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடங்கின.
ஏப்ரல் 2010 இல், இரு தலைவர்களும் ப்ராக் நகரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும், அமெரிக்க செனட்டில் ஒரு சர்ச்சைக்குரிய ஒப்புதல் செயல்முறைக்குப் பிறகும், ரஷ்யக் கூட்டாட்சி சபையின் ஒப்புதலுக்குப் பிறகும், இது பிப்ரவரி 5, 2011 அன்று நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தம் முதலில் 2021 இல் காலாவதியாகவிருந்தது.
அந்தக் காலக்கெடுவுக்கு சில நாட்களுக்கு முன்பு, பைடன் நிர்வாகமும் கிரெம்ளினும் ஒரு முறை மட்டும் ஐந்து ஆண்டு கால நீட்டிப்புக்கு ஒப்புக் கொண்டன என்ற நிலையில் இதன் மூலம் அதன் காலாவதி தேதி பிப்ரவரி 5, 2026 ஆக மாற்றப்பட்டது.
இது ஒவ்வொரு தரப்பின் அணு ஆயுதக் கிடங்கையும் 1,550 என்ற அளவில் பயன்படுத்தப்படும் மூலோபாயப் போர்க் குண்டுகளாகக் கட்டுப்படுத்தியது.
மேலும் இது 2002 இல் நிர்ணயிக்கப்பட்ட முந்தைய வரம்பிலிருந்து கிட்டத்தட்ட 30% குறைப்பு ஆகும்.
இன்று, உலகின் இரண்டு பெரிய அணு ஆயுதக் கிடங்குகள் மீதான சட்டப் பூர்வக் கட்டுப்பாடுகள் நீங்கிவிட்டன.
1972-க்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக் கூடிய மூலோபாய அணு ஆயுதங்களின் எண்ணிக்கைக்குச் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் வரம்புகள் எதுவும் இல்லை.