பீர்பால் சாஹ்னி தொல்லுயிர் அறிவியல் நிறுவனம் (BSIP) நடத்திய ஆய்வில், தற்போதைய காலகட்டத்திற்கு முன்பு (BP) சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமான இந்திய கோடைக்காலப் பருவமழை (ISM) ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பங்களித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்தகால தாவரங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை மறுகட்டமைக்க, கர்வால் இமயமலையில் உள்ள தியோரியா தால் ஏரியிலிருந்து மகரந்தப் பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
4.2 ka நிகழ்வு (4,200 ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை மாற்றம்) ஆனது குளிர்ந்த மற்றும் வறண்டப் பருவநிலையை ஏற்படுத்தியதாகவும், பருவமழையை பலவீனப் படுத்தியதாகவும், சிந்து மற்றும் கக்கர்-ஹக்ரா நதிப் பகுதிகளில் விவசாயத்தை பாதித்ததாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
நதி வெள்ளம் மற்றும் நீர் இருப்பு குறைந்ததன் காரணமாக, ஹரப்பா மக்கள் கிழக்கு கங்கை சமவெளிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த பருவநிலை மாற்றம், 'வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கு மண்டலம்' (ITCZ), 'எல் நினோ' (El Niño) மற்றும் 'இந்தியப் பெருங்கடல் இருமுனை' (IOD) ஆகியவற்றின் மாற்றங்கள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையது என ஆய்வு இணைக்கிறது.