கேரளா, 'கேரளம்' என மாறினாலும், கேரள உயர் நீதிமன்றம் (HCK) என்ற பெயர் அப்படியே நிலைத்திருக்கும்.
கேரளாவின் பெயர் 'கேரளம்' என மாற்றப்படுவதால், கேரள உயர் நீதிமன்றத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
உயர் நீதிமன்றத்திற்கான பெயர் திருத்தச் செயல்முறையானது, மாநில நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரிலும், மாநில நீதித்துறையின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரும் நாடாளுமன்றத்தால் தொடங்கப்பட வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றமானது, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய உயர் நீதிமன்றப் பெயர் திருத்தச் சட்டத்தின் மூலமாக மட்டுமே செய்யப்பட முடியும்.
2016-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்களின் பெயர்களைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல், பின்னர் காலாவதியாகி விட்டன.
மேலும், நீதித்துறையானது மாநில அரசின் ஒரு பகுதியாக இல்லை; அது ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றாகத் தற்சார்புடையது.
மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் பெயர் மாற்றங்கள், உயர் நீதிமன்றத்தின் பெயரையோ அல்லது அதன் தன்மையையோ பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.
அத்தகைய எந்தவொரு முடிவும் நாடாளுமன்றத்தால் தொடங்கப்பட வேண்டி இருக்கலாம்.
அந்தந்த மாநிலங்களின் பெயர்களில் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றங்களின் அசல் பெயர்கள் தக்க வைக்கப் பட்ட நிகழ்வுகளையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தையும் மெட்ராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டத்தையும் இணைத்து கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி எர்ணாகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு உயர் நீதிமன்ற கேரளா நிறுவப் பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு திருவனந்தபுரத்திலும், கொச்சிக்கு எர்ணாகுளத்திலும் உயர் நீதிமன்றமும், மலபார் மாவட்டம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலும் இருந்தன.
1949 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர்-கொச்சி உயர் நீதிமன்றம் எர்ணாகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.