கள்ளக்குறிச்சி

January 10, 201942 days 1360
 • விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை இதனால் 33-ஆக உயர்கிறது.
 • மக்கள்தொகைப் பெருக்கமும், கிராமப்புற வளர்ச்சியின் தேவையும், மாநிலங்களும் மாவட்டங்களும் பிரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. முந்தைய தென்னாற்க்காடு கடலூர், விழுப்புரம் என்று 1993-இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிறகுதான் இரண்டு மாவட்டங்களுமே ஓரளவு வளர்ச்சியைப் பெற்றன.
விழுப்புரம் மாவட்டம் 
 • இப்போதைய விழுப்புரம் மாவட்டம் என்பது மயிலம், திண்டிவனம், வடலூர், வானூர், செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 12 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாகத் திகழ்கிறது. இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.
 • 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 31-ஆம் தேதி உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் 7,217 ச.கி.மீ. பரப்புடன் 34,58,873 மக்கள்தொகையுடன் நான்கு வருவாய்க் கோட்டங்கள், ஒன்பது தாலுகாக்கள், மூன்று நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய மாவட்டமாக இருந்தும்கூட, பெரிய அளவில் வளர்ச்சி அடையாத மாவட்டமாகவே தொடர்ந்து வருகிறது என்பதால், இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை வரவேற்காமல் இருக்க முடியவில்லை.
  கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.
 • எழுத்தறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், கள்ளச் சாராய வணிகம், மருத்துவ வசதி இல்லாமை, பெரும்பாலான இடங்களில் முறையான சாலைப் போக்குவரத்து இல்லாமல் இருப்பது என்று தமிழகத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பகுதி தொடர்ந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி
 • இந்த மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலைப் பகுதி கிராமங்கள் விழுப்புரத்திலிருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்கின்றன. அங்கே இருக்கும் 30 கிராமங்களில், வெள்ளிமலைக்கு மட்டும்தான் சாலை வசதி இருக்கிறது. அதற்கும்கூட, தினந்தோறும் நான்கு முறை சிற்றுந்துகள் மட்டும்தான் விடப்படுகின்றன. கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன் மலைப் பகுதி, இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் மின்சார வசதியைப் பெற்றது எனும்போது, எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்டத்தின் இந்தப் பகுதி தொடர்கிறது.
 • இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய ஐந்து கிராமப்புறத் தொகுதிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வளர்ச்சி அடையாத பிற்ப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவில்தான் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்துதான் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் வாழ வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
 • கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகும்போது, மாநில அரசின் கொள்கைப்படி இங்கே தொழிற்பயிற்சி நிலையம், தொழிற் பயிற்சிக் கல்லூரி, கலை – அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவை அரசால் ஏற்படுத்தப்படும் என்பதால் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அவை பெரிய அளவில் உதவும்.
சங்க காலத்தில்…. 
 • இப்போது புதிதாக உருவாகி இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்க காலத்தில் மலையமான் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. சேதிரையன் என்கிற பட்டத்துடன் இந்தப் பகுதியை ஆண்டவர்களில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  மலையமான் அரசர்களின் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள் இந்தப் பகுதியிலிருந்து கிடைத்திருக்கின்றன.
 • முதலாம் ராஜராஜ சோழனின் தாயாரான வானவன் மகாதேவி மலையமான் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதிலிருந்து இந்தப் பகுதியின் தொன்மையை அறியலாம். சங்கப் புலவர்களில் முதன்மை முக்கியத்துவம் பெறும் குறிப்பிடத்தக்க ஒருவரான கபிலர் வாழ்ந்த பூமி இது.
 • வரலாற்றுப் புகழ் பெற்ற இந்தப் பகுதி சங்கப் புலவர்களால் பாடப்பட்ட பகுதி. கடையேழு வள்ளல்களின் வரலாற்றுப் பதிவுள்ள பகுதி. இப்போது புறக்கணிக்கப்பட்ட பகுதியாக பின்தங்கியிருக்கும் இந்தப் பகுதிகள் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் ஆவதன் மூலம், இழந்த வரலாற்றுப் பெருமையை மீட்டெடுக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
 • இதன் மூலம் புதிய மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்களின் மூலம் கிராமப்புற வேளாண் இடருக்குத் தீர்வும் காணப்படுமேயானால், அவை இன்றைய அரசின் சாதனைகளாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.

நன்றி: தினமணி