மொழி உரிமையும் நாட்டு ஒற்றுமையும்

June 17, 201929 days 00
 • இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அதிலும் குறிப்பாக சமத்துவத்துக்கான உரிமைகளைப் பற்றிப் பேசும் அரசமைப்புச் சட்டத்தின் 15(1)ஆம் பிரிவானது, ‘இந்தியக் குடிமக்களில் யாரையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பாகுபடுத்தாது’ என்று கூறுகிறது. இந்தப் பிரிவிலும் சரி; ‘அரசாங்க வேலைவாய்ப்பில், பதவி விஷயங்களில் குடிமக்கள் யாரையும் மதம், இனம், சாதி, பாலினம், கால்வழி மரபு, பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பாகுபடுத்தாது’ என்று கூறும் 16(2)ஆம் பிரிவிலும் சரி; மொழியை இந்திய அரசு இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
 • இதிலிருந்தே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திய அரசமைப்பில் ஒரே தகுதியைக் கொண்டவையல்ல என்பதும், இந்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் சமமானதாகப் பாவிக்காது என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் அலுவல் மொழி பற்றிப் பேசும் 343(1)ஆம் பிரிவு ‘இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தி’ என்று கூறுகிறது. பிற மொழி பேசும் மாநிலங்களுக்கான சலுகையாக, ‘அலுவல் விஷயங்களுக்காக இப்போது ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதைப் போலவே அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் நாளிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் பயன்படுத்தப்படுவது தொடரும்’ என்று 343(2) கூறுகிறது. எதற்கும் இருக்கட்டும் என்று, ‘15 ஆண்டுகளுக்குப் பிறகும் அலுவல் விஷயங்களுக்காக ஆங்கிலம் நீட்டிக்கப்படுவது அவசியமெனில், அதை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் நீட்டிக்கலாம்’ என்று 343(3) கூறுகிறது.
தேச ஒற்றுமையின் பெயரிலான தனியுரிமை
 • பல தேசிய இனங்களைக் கொண்ட, பல மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் ஏனிந்த அலுவல் மொழி என்ற தனியுரிமை? ஒரு நாட்டில் உள்ள அனைத்து மதங்களும், இனங்களும், சாதிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் எனில், மொழி விஷயத்தில் மட்டும் ஏனிந்தப் பாரபட்சம் காட்டப்பட வேண்டும்? இதற்கான விடை: தேச ஒற்றுமை. ‘இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஒரு மொழியேனும் இருக்க வேண்டும், அது இந்திய மொழியாக இருக்க வேண்டும். அனைவரும் ஒரே மொழியில் தங்களது கருத்துக்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டால்தான் மக்கள் அனைவருக்கும் நாம் ஒரே தேசத்தவர் என்ற உணர்வு வரும், தேசிய ஒருமைப்பாடு ஓங்கும்’ என்ற தர்க்கமே இதன் அடிப்படை.
 • சுதந்திரப் போராட்டக் கால காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இந்தப் புரிதலையே கொண்டிருந்தனர். இலக்கியத் தகுதியின் அல்லது பழமையின் அடிப்படையில் அல்ல. மாறாக, இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி என்ற அடிப்படையிலேயே இந்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி ஆக்கப்படுவதாகக் காரணம் கூறப்பட்டது. வேடிக்கை என்னவெனில் இந்தி, உருது, பஞ்சாபி மட்டுமல்ல மைதிலி, போஜ்புரி, அவாதி, அங்கிகா, பிராஜ் போன்ற பல மொழிகளையும் இந்தி அல்லது இந்துஸ்தானி என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இந்தி/இந்துஸ்தானி பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 45%. மற்றபடி, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 25% மட்டுமே.
தேசிய மொழி வேறு, அலுவல் மொழி வேறா?
 • இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட வேளையில் அதை இந்தி, இந்துஸ்தானி, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பெற்று மொழியாக்கப்பட்டன. இந்த மூன்று மொழிகளும் நன்கு தெரிந்த நேருவின் பார்வைக்கு மொழியாக்கங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. படித்துப் பார்த்த நேரு, புத்தகங்களைத் தனக்கு அனுப்பிவைத்த அரசமைப்பு அவையின் தலைவரும் பின்னர் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் ஆன ராஜேந்திர பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒன்றுமே விளங்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மூன்று மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழும் வங்கமும் நவீன அரசியல், அறிவியல், தொழில்நுட்பக் கருத்துக்களை மொழிபெயர்ப்பதற்குப் பெரிதும் ஏற்றவையாக இருந்தன என்ற கருத்தைப் பல அறிஞர்கள் அப்போதே கூறினர்.
 • இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல; அலுவல் மொழி மட்டுமே என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. ஏதோ இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதைப் போல். அலுவல் மொழி என்பது தேசிய மொழி என்பதன் இடக்கரடக்கலன்றி வேறில்லை என இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கம் பற்றியும் அதன் செயல்பாடு பற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க சட்ட அறிஞர் கிரான்வில் ஆஸ்டின் கூறுகிறார். ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட உலகின் அனைத்து நாடுகளுமே அலுவல் மொழி என்றுதான் குறிப்பிடுகின்றனவேயன்றி, தேசிய மொழி என்றல்ல.
 • தொடக்கத்திலிருந்தே, அதாவது காந்தியின் தலைமையில் மக்கள் இயக்கமாக காங்கிரஸ் உருவான 1920-களிலிருந்தே இந்தியாவின் தேசிய மொழியாக இந்துஸ்தானிதான் (இந்தியும் உருதுவும் கலந்தது) இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்திவந்தார். இதன் மூலம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தி, இந்தியர்கள் அனைவரையும் ஒரே தேசத்தவர்கள் என்ற உணர்வை பெறச் செய்ய முடியும் என்று காந்தி கருதினார். திராவிட மொழிகள் இருப்பதையோ அவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதைப் பற்றி காந்தியோ, காங்கிரஸ் தலைமையோ சிந்திக்கவேயில்லை என்பதுகூட ஆச்சரியமில்லை. ஆனால், தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கும் தங்களது தாய்மொழி குறித்த பெருமித உணர்வோ, தேசம் என்ற நவீன புலப்பாடு குறித்த புரிதலோ ஏதுமில்லாமல் காங்கிரஸ் தலைமையின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டதுதான் ஆச்சரியம்.
 • நாடு பிரிவினைக்குள்ளாகி பாகிஸ்தான் உருவான பிறகு, இந்துஸ்தானிக்கான வாய்ப்பு முற்றிலும் மறைந்துபோனது. ‘சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தூய இந்திதான் தேசிய/அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திவந்த, இந்தி தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கவே உரிமையற்றவர்கள் என்று கூறிவந்த வட இந்திய உயர் சாதி இந்துக்களின் கை அரசமைப்பு அவையில் ஓங்கியது.
எல்லா மொழிகளும் அலுவல் மொழியாகட்டும்
 • காலனி ஆட்சியாளர்களின் மொழி, நாட்டின் அலுவல் மொழியாகத் தொடர்வது கேவலம் என்று ஒரு சுதந்திர நாடு உணர்வது முழுக்க முழுக்க நியாயமானதுதான். ஜெர்மனி, பிரான்ஸ், சீனா போன்ற மிகப் பெரும்பான்மையான மக்கள் ஒரே தேசிய இனமாக, ஒரே மொழி பேசுபவர்களாக இருக்கும் நாடுகளில் தேசம், அரசு ஆகிய இரண்டுக்கும் முரண்கள் ஏதும் இருப்பதில்லை. ஆக, ஒரே அலுவல் மொழியை அவை கொண்டிருப்பதில் பிரச்சினை இல்லை.
 • ஆனால், இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் அவற்றின் மொழிகள் சமமான தகுதியைக் கொண்டவையாக இருப்பது அவசியம் அல்லவா? 60 லட்சம் பேர் மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் நான்கு மொழிகளும், 80 லட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கின்றன. 5 கோடி மக்கள்தொகை, (தமிழ்நாட்டை விடக் குறைவான மக்கள்தொகை) கொண்ட தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகள் அலுவல் மொழிகளாக இருக்கின்றன. எனில், 130 கோடிப் பேர் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 15 அல்லது 20 மொழிகள் அலுவல் மொழிகளாக இருப்பதில் என்ன சிக்கல்?
 • பல மொழிகள் கற்பது என்பது அற்புதமானது, அறிதல் திறனை அதிகரிப்பது. ஆனால், எந்தெந்த மொழிகளைக் கற்பது என்பது அந்தந்த மனிதனின் விருப்பத்துக்கு விடப்பட வேண்டும். தனது நாட்டில் பேசப்படும் மொழிகளில் ஒரு மொழியை மற்றொரு மொழியைவிட தகுதிக் குறைவானதாக நடத்தும் எந்த ஒரு அரசும் தனது நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கிவிட முடியாது. தனது மொழியின் உரிமையை விட்டுக்கொடுத்துதான் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்க முடியுமெனில், சுயமரியாதை உள்ள யாரும் நாட்டின் ஒற்றுமையைத்தான் தியாகம் செய்வாரேயன்றி, தனது மொழியை அல்ல என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17-06-2019)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =