TNPSC Thervupettagam

முதல் குடிமகன்

September 21 , 2017 2402 days 10452 0

முதல் குடிமகன்

____________

 அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்

அண்மையில் ஜூலை 25 ஆம் தேதி நம் நாட்டின் பதினான்காவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் தலைவர், முதல் குடிமகன் ஆவார். அது மட்டுமல்லாமல் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். மேலும் தலித் சமூகத்தினைச் சார்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவிக்காலம்
குடியரசுத் தலைவர் பொதுவாக பாராளுமன்றத்தின் இரு அவைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். நம் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 55 ஆனது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தெரிவிக்கின்றது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 58 குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சில வரையறைகளை வகுத்துள்ளது. முதற்கண் அவர் இந்தியக்குடிமகனாய் இருத்தல் வேண்டும்; மேலும் 35 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்; அது மட்டுமல்லாமல் மக்களவை உறுப்பினராவதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்; மேலும் எந்த விதமான ஊதியம் பெறும் பதவியையும் அவர் வகிக்கக் கூடாது; 1952 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டப்படி நியமனம் செய்யப்படுவதற்கு 50 நபர்கள் முன் மொழிபவர்களாகவும் 50 நபர்கள் வழி மொழிபவர்களாகவும் இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 56 (1) ன் படி குடியரசுத்தலைவர் தான் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து வருடங்கள் பதவியில் இருக்க முடியும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 56 (1) (c) ன் படி பதவிக்காலம் முடிந்த பின் புதியவர் பதவி ஏற்கும் வரை அவர் அப்பதவியில் தொடரலாம்.
குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்தல்
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஏற்படும் சந்தேகங்கள், முரண்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 71(1) கூறுகின்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகளுள் ஏதேனும் ஒரு அவை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றம் சார்ந்த அறிவிப்பினை வெளியிடும். அதில் அவையின் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். அந்த அறிவிப்பினைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய 14 நாட்களுக்குப் பிறகு அது செயல்முறைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் குடியரசுத் தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும். பின் , மற்றொரு அவைக்கு அனுப்பப்படல் வேண்டும். அந்த அவை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். இரண்டாவது அவை சிறப்புப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றும் பட்சத்தில், நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து குடியரசுத் தலைவர் பதவி விலகல் வேண்டும். இதுவரை எந்தக் குடியரசுத் தலைவரும் குற்றச்சாட்டினால் பதவி விலக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவது, இறப்பு, ராஜினாமா, பதவி நீக்கம் ஆகியவற்றால் அவர் பதவியில் இல்லாத பொழுது துணை குடியரசுத் தலைவர் அவருடைய பணிகளைப் புரிதல் வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 65 கூறுகின்றது.
குடியரசுத்தலைவர் இல்லம் (Rashtrapathi Bhawan)
புது தில்லியில் உள்ள ரெய்சினா மலைப்பகுதியில் உள்ள குடியரசுத்தலைவர் இல்லம் (Rashtrapathi Bhawan) 320 ஏக்கரில் 340 அறைகள் கொண்டது. ரெய்சினா மற்றும் மல்கா கிராமங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. உலகளவில் உள்ள நாட்டின் தலைவர்களின் பெரிய இல்லங்களில் இதுவும் ஒன்று.
இந்த கட்டிடம் எதற்காக கட்டப்பட்டது தெரியுமா? 1911 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து தலைநகரம் தில்லிக்கு மாற்றப்பட்டப்பொழுது வைஸ்ராய் தங்குவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டது. 1912-ல் கட்டத் துவங்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பாளர் யார் தெரியுமா? எட்வின் லுட்டின்ஸ் ஆவார். மேலும், சிம்லாவில் உள்ள சாராப்ராவிலும் ஹைதராபாத்தில் உள்ள போலாரம்மிலும் குடியரசுத்தலைவர் மாளிகைகள் உள்ளன.
குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் (Powers and Functions)
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53 ன் படி குடியரசுத்தலைவர் தன்னுடைய அதிகாரத்தினை நேரிடையாகவோ அல்லது துணை அதிகாரி மூலமாகவோ நிறைவேற்ற இயலும். நாட்டின் தலைவராக இருந்த பொழுதிலும் அவரின் நிர்வாக அதிகாரங்கள் பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையின் மூலமே நிறைவேற்ற முடியும். மேலும், மரபு ரீதியாக அமைச்சரவை மற்றும் பிரதம மந்திரியின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 60 ன் படி குடியரசுத்தலைவரின் முதன்மைப்பணி என்ன தெரியுமா? அரசியலமைப்பைப் பாதுகாப்பது ஆகும். அரசியலமைப்புப் பிரிவு 74ன் படி அவருடைய செயல்களும் பரிந்துரைகளும் அரசியலமைப்புச் சட்டப்படியே அமைதல் வேண்டும்.
அரசியலமைப்பின் படி சட்டமியற்றும் செயல்முறைக்குக் குடியரசுத்தலைவரே தலைவர் ஆவார். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றைக் கூட்டவும் ,ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர். மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 85 (2-b) யின்படி மக்களவையைக் கலைத்திடும் அதிகாரம் பெற்றவர்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 87(1)ன் படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையில் உரையாற்றும் உரிமை பெற்றவர். மேலும், ஒவ்வொரு வருடத்திலும் முதல் கூட்டத்தொடர் துவங்கும் முன்பும் உரையாற்றித் துவக்கி வைப்பார். அந்த உரைகள் அரசின் புதிய திட்டங்களின் முக்கியக் கூறுகளைக் கூறுவதாய் அமையும்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 111ன் படி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே எந்த ஒரு மசோதாவும் சட்டமாகும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக எந்தவொரு மசோதாவை அனுப்பும் பொழுதும் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம்; அல்லது நிறுத்தி வைக்கலாம்; அல்லது மறு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் பண மசோதா அவருடைய ஒப்புதல் பெற்றே அறிமுகப்படுத்தப்படுவதால் மறுபரிசீலனை முறை அதற்குப் பொருந்தாது.
மேலும், ஒரு குறிப்பிட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்தினை மீறுவதாக கருதினால் அவருடைய பரிந்துரையுடன் அந்த மசோதாவினைத் திருப்பி அனுப்பலாம். பின் அந்த மசோதா திருத்தங்களோடோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும். இம்முறை அவருடைய ஒப்புதலைத் தராமல் இருக்க இயலாது. எந்த ஒரு பிரச்சினை குறித்தும் உச்ச நீதி மன்றத்தினை கலந்தாலோசிக்க அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143 வழிவகை செய்கின்றது. மேலும் அவசரச் சட்டத்தினைப் பிறப்பிக்க அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 123 வழி வகை செய்கின்றது. அச்சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தினை மீறும் எந்த ஒரு கூறும் இருக்கக் கூடாது. மத்திய அமைச்சரவையும் பிரதம மந்திரியும் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை கூறும் பொறுப்புடையவர்கள். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(2)ன் படி அந்த ஆலோசனை அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதினை ஆய்வு செய்யும் பொறுப்பு குடியரசுத் தலைவருடையதாகும்.
உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியையும் அவருடைய அறிவுரையின் படி பிற நீதிபதிகளையும் நியமிக்கின்றார். இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றி சபையின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு வருகையும் பெரும்பான்மையான ஆதரவு வாக்கும் அத்தீர்மானத்திற்கு இருந்தால் நீதிபதியை நீக்கும் அதிகாரம் அவருக்குண்டு. மேலும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 76(1)ன் படி தலைமை சட்ட ஆலோசகரான அட்டர்னி ஜெனரலை நியமிக்கின்றார். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 88ன் படி அட்டர்னி ஜெனரலை பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்து சட்ட மீறல்கள் ஏதேனும் இருப்பின் தமக்கு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடுகின்றார்.
குடியரசுத்தலைவர் , பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி யாரையெல்லாம் பதவியில் அமர்த்துகின்றார் தெரியுமாஅமைச்சர்கள், ஆளுநர், அட்டர்னி ஜெனரல், தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கையாளர் (CAG), தலைமைத் தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பிற நாடுகளுக்கான அரசுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கின்றார்.
திடீரென்று ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க எதிர்பாராத செலவு நிதியிலிருந்து செலவு செய்யும் அதிகாரம் பெற்றவர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையத்தினை அமைத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையே வரியினைப் பங்கீடு செய்ய பரிந்துரை செய்வதற்கு வழிவகை செய்கின்றார்.
குடியரசுத் தலைவரின் மன்னிக்கும் அதிகாரங்கள் என்னென்ன தெரியுமா? அவை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 72 ல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக மன்னித்தல், தண்டனையினைக் குறைத்தல், தண்டனையின் தன்மையைக் குறைத்தல் ( மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை) , தண்டனையை ஒத்தி வைத்தல், கர்ப்பிணி, மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற அசாதாரணச் சூழ்நிலைகளின் போது தண்டனையினைக் குறைத்தல் ஆகியன ஆகும்.
குடியரசுத்தலைவர் தேசிய, மாநில, நிதி அவசர நிலைகளை முறையே அரசியலமைப்புப் பிரிவுகள் 352, 356, 360 ஆகியவற்றின்கீழ் பிரகடனம் செய்யலாம். 1962 ஆம் ஆண்டு இந்திய சீனப் போரின் போது சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களாலும், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது வி.வி. கிரி அவர்களாலும், 1975 லிருந்து 77 வரை தேசிய அவசர நிலையின் பொழுது பக்ருதீன் அலி முகமது அவர்களாலும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தப் பிரகடனமானது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இத்தகைய அவசர நிலை ஆறு மாதங்கள் வரை பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு விதிக்க இயலும். அச்சூழ்நிலையில் தனிநபர் உயிர் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் (Article 20 & 21) தவிர அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்படும்.
ஆளுநரின் அறிக்கை படி அல்லது பிறவற்றின் மூலமாக ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் படி ஆட்சி நடைபெற வில்லை என்பதினை அறிந்தால் அம்மாநிலத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய இயலும். இந்த அவசர நிலைப் பிரகடனமானது பாராளுமன்றத்தில் இரண்டு மாதத்திற்குள் ஒப்புதல் பெற வேண்டும். ஆறு மாதங்களுக்கொரு முறை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கலாம். அத்தகைய அவசர நிலைப் பிரகடனத்தின் பொழுது முழு நிர்வாக அதிகாரங்களையும் குடியரசுத் தலைவர் செயல்படுத்த முடியும்.
நிதிநிலை அவசரப்பிரகடனம் இதுவரை செயல்படுத்தப் படவில்லை. அவ்வாறு நிறைவேற்றப்படின் சாதாரணப் பெரும்பான்மையின்படி பாராளுமன்றத்தில் இரண்டு மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும். இந்த அவசர நிலையின் பொழுது உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட அனைத்து அரசுப் பணியாளர்களின் ஊதியத்தினையும் குறைக்க இயலும். அது மட்டுமல்லாமல் மாநிலச் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் அனைத்துப் பண மசோதாக்களும் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். ஏனெனில் நிதிசார் விவகாரங்கள் சார்ந்து அவர் சில கொள்கைகளைக் கடைபிடிக்க நெறிப்படுத்துவார்.
அரசாங்கத்தால் மட்டும் நாடு உருவாக்கப்படுவதில்லை!!
14 வது குடியரசுத் தலைவரான பிறகு ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில் “அரசாங்கத்தால் மட்டும் நாடு உருவாக்கப்படுவதில்லை. ஒவ்வொரு குடிமகனும் நாட்டினை உருவாக்குபவர் ஆவர்” என்று கூறியுள்ளார். அது மிகச் சரியானது அல்லவா! மேலும் அவர் “டாக்டர். ராதா கிருஷ்ணன், அப்துல் கலாம் வழியில் செல்ல இருப்பதில் பெருமையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் செல்லும் வழி சிறப்பான வழியாக அமைந்து இந்தியா உலகினில் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்.
தகவல் பேழை
  • இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • பதவியின் போது இறந்த குடியரசுத்தலைவர்கள் ஜாஹீர் ஹூசைன், மற்றும் பக்ருதீன் அலி முகமது ஆவர்.
  • முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில். மேலும் ராஜஸ்தானின் முதல் பெண் ஆளுநர் ஆவர்.
  • தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவர் டாக்டர் . இராதா கிருஷ்ணன்
  • முதல் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தக் குடியரசுத் தலைவர் ஜாஹீர் ஹுசைன்
  • தலைமை நீதிபதியாக இருந்து இந்திய குடியரசுத் தலைவராக ஆனவர் முகம்மது ஹிதயதுல்லா
  • செயல் குடியரசுத் தலைவராகவும் , குடியரசுத்தலைவராகவும் பணியாற்றிய ஒரே குடியரசுத் தலைவர் வி.வி. கிரி
  • ஜனதா கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி
  • அணிசேரா இயக்கத்தின் பொதுச் செயலராக இருந்து குடியரசுத் தலைவர் ஆனவர் கியானி செயில் சிங்
  •  முதன்முதலில் தன்னுடைய பதவிக்காலத்தினை நிறைவு செய்த முஸ்லீம் மதம் சார்ந்தக் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்
  • தலித் சமூகத்தினைச் சார்ந்த முதல் குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணன்
  • செயல் குடியரசுத் தலைவராகவும் , குடியரசுத்தலைவராகவும் பணியாற்றிய ஒரே குடியரசுத் தலைவர் வி.வி. கிரி
  • ஜனதா கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி
  • அணிசேரா இயக்கத்தின் பொதுச் செயலராக இருந்து குடியரசுத் தலைவர் ஆனவர் கியானி செயில் சிங்
  • முதன்முதலில் தன்னுடைய பதவிக்காலத்தினை நிறைவு செய்த முஸ்லீம் மதம் சார்ந்தக் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்
  • தலித் சமூகத்தினைச் சார்ந்த முதல் குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories