அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எந்தவொரு கலைப் படைப்பையும் வெளியிடக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது.
இது 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் கீழான சில விதிகளை திருத்தம் செய்துள்ளது.
எந்தவொரு அரசு ஊழியரும் இனி எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று அந்தத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை போன்ற நூல்களை எழுதும் அரசுப் பணியாளர், வெளியீட்டு நிறுவனங்களிடம் இருந்து சன்மானத்தினைப் பெற்ற உடன், உடனடியாகப் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் அது குறித்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
அந்தப் புத்தகத்தில் அரசுக்கு எதிராக என்று எந்த ஒரு விமர்சனமும் அல்லது கண்டன அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை என்று அந்த அரசுப் பணியாளர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்த ஆட்சேபனைக்குரிய உரை / உள்ளடக்கமும் அந்தப் புத்தகத்தில் இல்லை என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் புத்தகத்தின் நகல்களை விற்பனை செய்வதை விளம்பரப்படுத்துவதற்காக, அரசுப் பணியாளர் தனது அலுவல் நேரத்தையும், அதிகாரப்பூர்வச் செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது.
எந்தவொரு அரசு ஊழியரும் அரசிடம் இருந்து முன் அனுமதி பெறாமல், வெளியீட்டு நிறுவனங்களிடம் இருந்து மொத்தச் சன்மானம் அல்லது உரிமம் அடிப்படையிலான சன்மானம் பெறக்கூடாது என்று புதிய விதிகள் கூறுகின்றன.