கலப்பு உயிரி – விமான எரிபொருளைப் பயன்படுத்திய முதல் இராணுவ விமானம்
December 23 , 2018 2417 days 773 0
உயிரி மற்றும் விமான எரிபொருள்கள் கலந்து உருவாக்கப்பட்ட எரிபொருள் மூலம் இந்தியாவின் முதல் இராணுவ விமானப் பயணத்தை இந்திய விமானப் படையானது சண்டிகரில் அன்-32 ரக போக்குவரத்து விமானத்தில் மேற்கொண்டது.
இந்த திட்டமானது இந்திய விமானப்படை, DRDO (Defence Research and Development Organization - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு), வானவியல் தர உத்திரவாத பொது இயக்குநரகம் மற்றும் CSIR - இந்திய பெட்ரோலிய நிறுவனம் (CSIR-IIP/ Indian Institute of Petroleum) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
10% உயிரி விமான எரிபொருள் மூலம் அன்-32 ரக விமானத்தை 2019 ஜனவரி 26 அன்று குடியரசு தின பறக்கும் நிகழ்வில் பறக்கவிட இந்திய விமானப் படையானது திட்டமிட்டுள்ளது.
ஜாத்ரோபா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எரிபொருளானது சத்தீஸ்கர் பயோடீசல் மேம்பாட்டு ஆணையத்திலிருந்து பெறப்பட்டு டேராடூனின் CSR-IIP ஆல் சுத்திகரிக்கப்படுகிறது.
முன்னதாக 2018 ஆகஸ்ட் மாதம் வணிக விமானமான ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானமானது நாட்டில் முதல் முறையாக உயிரி விமான எரிபொருள் மூலம் இயக்கப்படும் விமானத்தை டெல்லி மற்றும் டேராடூனுக்கு இடையே இயக்கியது.