TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026 – சுகாதாரத் துறை

August 20 , 2026 5 days 125 0
  • தமிழ்நாடு முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதுடன், இது 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களை உள்ளடக்கியதாகும்.
  • இத்திட்டமானது வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை தொகுப்புகள், மேம்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உயர்நிலை நோயறிதல் சேவைகள் உள்ளிட்ட இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கும்.
  • தற்போதைய மற்றும் எதிர்கால சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 87 ஆண்டுகள் பழமையான 1939 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு நவீன, விரிவான சட்டம் கொண்டுவரப்படும்.
  • மருத்துவமனைகளுக்கு வெளியே மருத்துவக் கண்காணிப்பற்ற முறையில் வீடுகளில் நடைபெறும் பிரசவங்களை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும்.
  • நாட்டின் சுகாதாரத் தலைநகரமாக அறியப்படும் தமிழ்நாடு, மருத்துவ சேவைகள், ஆராய்ச்சி, மருத்துவ சுற்றுலா மற்றும் ஆயுஷ் (AYUSH) ஆகியவற்றை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ மையமான 'TN மெடிசிட்டி' (TN Medicity) ஒன்றை நிறுவும்.
  • 1,257 அரசு சுகாதார நிலையங்கள் வாயிலாக 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ஆண்டுதோறும் 14 அடிப்படை பரிசோதனைகளை இலவசமாக வழங்கும் 'நலம் 360 – அனைவருக்கான வருடாந்திர இலவச முழு உடல் பரிசோதனைத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.
  • இந்தப் பரிசோதனைகளில் இரத்த அழுத்தம், ECG, ஹீமோகுளோபின், முழுமையான ஹீமோகிராம், சீரற்ற இரத்த சர்க்கரை, யூரியா, கிரியேட்டினின், மொத்த கொழுப்பு, சீரம் பிலிரூபின், சிறுநீர் அல்புமின் மற்றும் VIA பரிசோதனை ஆகியவை அடங்கும்.
  • மாநிலத்தில் முதல் முறையாக, பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் மூலம் பெருநகரப் பகுதிகளில் வீடு தேடி வரும் நோயறிதல் சேவைகள் வாயிலாக மாதிரிகள் சேகரிப்பு மற்றும் பரிசோதனை வசதிகள் வழங்கப்படும்.
  • சமூகம், குடும்பம் மற்றும் தனிநபர் அளவிலான முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, நலம் 360 அலைபேசி செயலியின் ஆதரவுடன் சுகாதாரத் துறை ஒரு 'நேர்மறை சுகாதாரக் கொள்கையை' அறிமுகப்படுத்தும்.
  • உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்கும் மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை உருவாக்குவதற்காக 'சுகாதாரப் பராமரிப்பில் மாநில முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு நிறுவனங்கள் சட்டம்' எனும் புதிய சட்டம் அறிமுகப் படுத்தப்படும்.
  • தமிழ்நாடு முதன்முறையாக, மாதவிடாய் நிற்கும் தருவாயில் (பெரி-மெனோபாஸ்) உள்ள பெண்களின் உடல் மற்றும் மனநலத் தேவைகளை முன்கூட்டியே கண்டறிவதோடு, பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான 'பெரி-மெனோபாசல் பராமரிப்புக் கொள்கையை' வகுக்கும்.
  • இக்கொள்கையின் கீழ், அறிகுறிகள் மதிப்பீடு, அடிப்படை பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தேவைப்படுவோரை மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க புளூடூத் வசதி கொண்ட இரத்த அழுத்தக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதை எளிதாக்கும் வகையில் நிகழ்நேரத் தரவுப் பரிமாற்றம் செய்யப் படும்.
  • வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டு முழுவதும் இலவசமாக இன்சுலின் வழங்கப்படும்.
  • ₹6.37 கோடி செலவில் 'இரும்புக் கண்மணி - பள்ளி மாணவிகளுக்கான இரத்த சோகை தடுப்புத் திட்டம்' தொடங்கப்படும்.
  • ஹப்-அண்ட்-ஸ்போக் (hub-and-spoke) மாதிரியின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஏழு அரிய மரபணு நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் பிறந்த குழந்தைகளுக்கான அரிய மரபணு நோய் பரிசோதனை திட்டத்தை தமிழ்நாடு தொடங்கவுள்ளது.
  • பிறந்த குழந்தைகளுக்கான இந்தப் பரிசோதனையில் பிறவி தைராய்டு குறைபாடு, பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளாசியா, கேலக்டோசீமியா மற்றும் பயோட்டினிடேஸ் குறைபாடு ஆகியவற்றுடன் மற்ற மூன்று அரிய மரபணு நோய்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்