1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கல்வித் தரங்களை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொழில்முறைப் படிப்புகளுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணை (G.O.) பிறப்பிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 15% இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகளுக்கும் பின்னர் சட்டப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கிராமப் புறங்களுக்கான ஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 25% ஆக உயர்த்தியது.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வானது, இந்திய அரசியலமைப்பின் 14வது சரத்தின் கீழ் இந்த அரசாணையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ரத்து செய்தது.
தமிழக அரசானது, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP) தாக்கல் செய்தது.
உள் இடஒதுக்கீடு ஆனது கிராமப்புற மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், மேலும் அது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டது என்றும் SLP வாதிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதன் விளைவாக, 25% கிராமப்புற இடஒதுக்கீடு கொள்கை நிறுத்தப் பட்டது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், எடப்பாடி K. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, NEET தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடுக்கான மசோதாவை நிறைவேற்றியது.
இந்தக் கொள்கையானது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி P. கலையரசன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது.
இந்த ஆணையம் 10% இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது, ஆனால் அரசாங்கம் 7.5% ஒதுக்கீட்டினையே செயல்படுத்தியது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டை விரிவுப்படுத்தியது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி D. முருகேசன் தலைமையிலான மற்றொரு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கொள்கையானது, தற்போதுள்ள 69% வெளி இடஒதுக்கீட்டைப் பாதிக்காமல், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு புதிய அளவுருவினை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கொள்கையின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்கள் BC, MBC, SC, ST மற்றும் OC உள்ளிட்ட அனைத்து வெளிப் பிரிவுகளிலும் முன்னுரிமை சேர்க்கையைப் பெறுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சென்னை உயர் நீதிமன்றம் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்தது.