திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி), திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பித்தார்.
வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், அரசியலமைப்பின் சரத்து 311ன் கீழ் விதிகளைப் பயன்படுத்தி எஸ்பி, அக்காவலர்களைப் பணிநீக்கம் செய்தார்.
இது "ஒன்றிய அரசு அல்லது ஒரு மாநிலத்தின் கீழ் குடிமைப் பதவிகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களைப் பணி நீக்கம் செய்தல், நீக்குதல் அல்லது தகுதியினைக் குறைத்தல்" ஆகியவற்றைக் கையாள்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஊழியருக்கு எதிராக விசாரணை நடத்தாமல் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த விதி கூறுகிறது.
ஆனால், அரசியலமைப்பின் சரத்து 311ன் பிரிவு 2(b) இன் கீழ் எஸ்பி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி "ஒரு நபரைப் பணிநீக்கம் செய்யவோ அல்லது நீக்கவோ அல்லது தகுதியினைக் குறைக்கவோ அதிகாரம் பெற்றிருந்தால், அந்த அதிகாரியால் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய சில காரணங்களால், அத்தகைய விசாரணையை நடத்துவது நியாயமான நடைமுறைக்குச் சாத்தியமில்லை" என்று திருப்தி அடைந்தால், அந்தப் பணியிலிருந்து அந்த நபரைப் பணி நீக்கம் செய்வது நியாயமானது என்று அது கூறுகிறது.
சுருக்கமாக, சரத்து 311-ன் படி, ஒரு பணியாளரைப் பணி நீக்கம் செய்வதற்கு துறை ரீதியான எவ்வித விசாரணையும் தேவையில்லை.
இதன் கீழ், அரசுப் பணியில் ஒருவரைத் தக்க வைத்துக் கொள்வது அரசின் பாதுகாப்பிற்குப் பாதகமானது என்று திருப்தி அடைந்தால், வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தாமல் அவரைப் பணி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.
சரத்து 311-ன் கீழ் ஒரு காவல்துறை அதிகாரியின் முதல் பணி நீக்கம் மதுரையில் பதிவாகியுள்ளது.
ஒரு தொழிலதிபரிடமிருந்து ₹10 லட்சத்தைப் பறித்ததற்காக கைது செய்யப் பட்ட பின்னர், ஏப்ரல் 11, 2023 அன்று ஒரு இன்ஸ்பெக்டர் விசாரணை எதுவும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப் பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் பணி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.