TNPSC Thervupettagam

தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026

August 17 , 2026 16 hrs 0 min 65 0
  • தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026-ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் தகுதி, நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள், அத்துடன் தீர்ப்பாயங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் செயல்திறனை மேம்படுத்துதல், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை இம்சோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், இச்சட்டம் 'தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை' (NTC) அமைப்பதையும் முன்மொழிகிறது.
  • இந்த ஆணையம் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்: இதில் இரண்டு நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களும், இரண்டு தொழில்நுட்பத் துறை சார்ந்த உறுப்பினர்களும் இடம்பெறுவர்.
  • உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் இதன் தலைவராக இருப்பார்.
  • புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த ஆணையம் (NTC), தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை நடத்துதல், செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தகவல்களுக்கான புதிய டிஜிட்டல் களஞ்சியத்தை நிர்வகித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் ஒரு சுதந்திரமான அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தீர்ப்பாயங்களின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் சீரான தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவருவதை இத்தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு தீர்ப்பாயத்திற்கும் 'தேடல் மற்றும் தேர்வுக்கான குழுக்களை' (Search-cum-Selection Committees) இந்த ஆணையம் அமைக்கும்.
  • இக்குழுக்களில் ஆணையத்தின் உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த அரசுச் செயலாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.
  • வேட்பாளர்களின் தகுதியை மதிப்பிடுவதில் இக்குழுக்களுக்கு உதவ, தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை அமைப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.
  • முக்கியமாக, தீர்ப்பாயங்களில் தற்போது நிலவும் நீண்டகால காலிப்பணியிடப் பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில், பரிந்துரைகளைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இம் மசோதா கட்டாயமாக்குகிறது.
  • நிலைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு தீர்ப்பாயங்களுக்கான பணி நிபந்தனைகளை இம் மசோதா சீராக்குகிறது.
  • தீர்ப்பாயத் தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது பூர்த்தியாகும் வரை பதவியில் இருப்பார்கள் என்று இது முன்மொழிகிறது.
  • அதேபோல, உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 67 வயது பூர்த்தியாகும் வரை பதவியில் இருப்பார்கள்.
  • பொறுப்புக் கூறலும் இதில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் ஒரு அம்சமாகும்.
  • தீர்ப்பாயத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணைகளை 'தேசிய தீர்ப்பாய ஆணையம்' (NTC) மேற்பார்வையிடும்.
  • திவால் நிலை அல்லது ஒழுக்கக்கேடான நடத்தை போன்ற குறிப்பிட்ட குற்றங்களுக்காக அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும், முறையற்ற நடத்தை அல்லது இயலாமை ஆகிய காரணங்களுக்காகப் பதவி நீக்கம் செய்வதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் முறையான விசாரணை தேவைப்படுகிறது.
  • தரவு இடைவெளியைக் குறைக்கும் வகையில், 'தேசிய தீர்ப்பாயத் தரவு வலைப்பின்னல்' (National Tribunals Data Grid) ஒன்றை உருவாக்க இம் மசோதா முன்மொழிகிறது.
  • வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போன்ற இம் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் கொண்ட ஒரு விரிவான களஞ்சியமாக இந்தப் இணையதளம் (portal) செயல்படும்.

பின்னணி

  • 2026 ஆம் ஆண்டின் இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் 2021 ஆம் ஆண்டு வழிகாட்டுதலுக்கு ஒரு சட்டரீதியான பதிலாகும். இது தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், 2021-க்கு மாற்றாகக் கொண்டு வரப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் 16 தீர்ப்பாயங்களின் "செயல்திறனின்மை மற்றும் சுதந்திரமின்மை"யை உச்ச நீதிமன்றம் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.
  • அதே தீர்ப்பில், குறுகிய பதவிக்காலங்கள், கட்டுப்படுத்தப்பட்ட வயது வரம்புகள் மற்றும் நியமனங்கள் மீதான கடுமையான நிர்வாகக் கட்டுப்பாடு ஆகியவை நீதித்துறை சுதந்திரத்தையும் அதிகாரப் பிரிவினையையும் மீறுவதாகக் கூறி, தீர்ப்பாய சீர்திருத்தங்கள் (முறைப்படுத்தல் மற்றும் சேவை நிபந்தனைகள்) அவசரச் சட்டம், 2021-இன் முக்கிய விதிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • தீர்ப்பாய சீர்திருத்த மசோதா, இந்தியாவில் உள்ள நீதித்துறை சார்ந்த அமைப்புகளின் செயல்பாட்டை மறுவடிவமைக்கக்கூடும்.
  • "தீர்ப்பாயங்களை நிர்வாகத் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதே" அரசின் நோக்கம், இதுவே மெட்ராஸ் பார் அசோசியேஷன் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் சட்டரீதியான வாதமாக இருந்தது.
  • எல். சந்திர குமார் எதிர் இந்திய ஒன்றிய (1997) வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில்கூட, தீர்ப்பாயங்களை நிர்வாகத் தலையீட்டிலிருந்து பாதுகாக்க ஒரு ஒற்றை, சுதந்திரமான ஒருங்கிணைப்பு அமைப்பின் தேவையை உச்ச நீதிமன்றம் கருத்தியல் ரீதியாக வரையறுத்தது.
  • இங்கு, உயர் நீதிமன்றங்களுக்கு (சரத்து 226/227-இன் கீழ்) மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு (சரத்து 32-இன் கீழ்) வழங்கப்பட்டுள்ள நீதித்துறை மறுஆய்வு அதிகாரம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • தீர்ப்பாயங்களின் நோக்கம் நீதிமன்றங்களுக்குப் பதிலாக அமைவதல்ல, மாறாக நவீன ஆட்சியில் துணை நிறுவனங்களாகச் செயல்படுவதே ஆகும்.
  • விரைவான மற்றும் திறமையான நீதி வழங்கலை உறுதி செய்யும் நோக்கத்துடன், வரி விதிப்பு, நிறுவனச் சட்டம், சுற்றுச்சூழல், பங்குச் சந்தை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிற ஒழுங்குமுறைத் துறைகள் போன்ற சிறப்பு விஷயங்களை அவை கையாளுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்