தென்னாப்பிரிக்காவில் காந்தி தொடர்பான ரயில் சம்பவத்தின் 130 ஆண்டுகள் நிறைவு
June 11 , 2023 788 days 485 0
ஐஎன்எஸ் திரிசூல் கப்பலானது பல வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்குப் பயணம் மேற்கொண்டது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான அரசுமுறை உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்ட 30வது ஆண்டு விழாவும் இதில் அடங்கும்.
130 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சம்பவத்தையும் இது குறிக்கிறது.
வணிகரான தாதா அப்துல்லாவுக்கு ஒரு சட்ட ஆலோசகராகப் பணியாற்றுவதற்காக என்று காந்தி 1893 ஆம் ஆண்டில் டர்பனுக்கு வந்தார்.
1893 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதியன்று, டிரான்ஸ்வால் மாகாணத்தில் உள்ள பிரிட்டோரியாவிற்கான ஒரு பயணத்தின் போது, அவர் முதலில் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
உரிய பயணச்சீட்டு வாங்கிய பிறகு முதல் வகுப்பு பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார்.
ஆனால் ஒரு ஐரோப்பியரின் உத்தரவின் பேரில் அவர் பின்னர் அந்தப் பெட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
அந்த நாட்களில், 'கூலிகள்' மற்றும் வெள்ளையர் அல்லாதவர்கள் முதல் வகுப்புப் பெட்டிகளில் பயணிப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.
இன ஒடுக்குமுறைக்கு எதிரான காந்தியின் போராட்டத்திற்கும் சத்தியாக்கிரகத்தின் தோற்றத்திற்கும் இந்தச் சம்பவமானது பெரும் தூண்டுதலாக அமைந்ததாகக் கருதப் படுகிறது.