மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கையினை 2021 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இக்கொள்கை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.
இக்கொள்கையானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைச் சமர்ப்பிக்கும் போது அவர் ஆற்றிய உரையில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பு
20 வருடங்களுக்கும் மேலான பழைய 51 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட இலகுரக மோட்டார் வாகனங்கள் இக்கொள்கையின் கீழ் அகற்றப்படும்.
34 லட்சம் இலகுரக மோட்டார் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலானவை. மேலும் 51 லட்சம் இலகுரக மோட்டார் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலானவை.
17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வணிகத்திற்குப் பயன்படும் வாகனங்கள் 15 வருடங்களுக்கும் மேலானவை ஆகும்.
சிறப்பம்சங்கள்
இக்கொள்கை, வாகனங்கள் வெளியிடும் மாசுப் பொருட்களைக் குறைப்பதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்.
இக்கொள்கையானது தரம் குறைந்த, பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் இல்லாத ஒரு சூழலை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் கீழ், 20 வருடங்களுக்குப் பிறகு சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப் படும் வாகனங்கள் ஆட்டோமொபைல் மையங்களில் தரநிர்ணய சோதனைக்கு உட்படுத்தப்படும்.
15 வருடங்களுக்குப் பிறகு வணிகத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் தரநிர்ணயச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஒரு வாகனம் மூன்று முறை தரநிர்ணய சோதனையில் தகுதி பெறவில்லையெனில் அதன் உரிமையாளர் அந்த வாகனத்தை சாலையில் பயணிக்க உபயோகிக்கக் கூடாது.