இந்திய தபால்துறையானது (மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்), டிஜிட்டல் முகவரி அடையாளத்திற்காக DigiPIN (டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்) என்ற புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
DigiPIN என்பது அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையுடன் இணைக்கப்பட்ட துல்லியமாக இருப்பிடத்தைக் கண்டறிய உதவுகின்ற 10 இலக்க புவி-குறியீட்டு டிஜிட்டல் முகவரி முறையாகும்.
இது தபால் சேவைகளில் முகவரித் துல்லியத்தை மேம்படுத்தி, விநியோகத்தை எளிதாக்குகிறது.
இந்த முறை கடிதப் போக்குவரத்து, கண்காணிப்பு, கடைசி மைல் இணைப்பு மற்றும் அவசர கால சேவைகளுக்காக இந்தியா போஸ்ட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது IIT ஐதராபாத் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதுடன் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட பாரம்பரிய 6 இலக்க பின் கோடு முறையுடன் இணைந்து செயல்படும்.