TNPSC Thervupettagam

IEA-வின் மின்சார இடைக்கால அறிக்கை 2026

August 2 , 2026 17 days 90 0
  • IEA-வின் 2026 மின்சார இடைக்கால அறிக்கையின்படி, உலகளாவிய மின்சார நுகர்வு 2025-ஆம் ஆண்டில் 28,600 டெராவாட் மணிநேரத்திலிருந்து 2027-ஆம் ஆண்டுக்குள் 30,700 டெராவாட் மணி நேரமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை, மின்சார வாகனங்கள், குளிரூட்டல், வீட்டு உபகரணங்கள் மற்றும் தரவு மையங்கள் ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப்படும்.
  • 2025-ஆம் ஆண்டில் ஏறக்குறைய சமநிலையை எட்டிய பிறகு, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி 2026-ஆம் ஆண்டில் உலகளவில் நிலக்கரியை விஞ்சும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • உலகளாவிய மின்சார விநியோக வளர்ச்சியில் சூரிய ஒளி மின்சக்தி மிகப்பெரியப் பங்களிப்பாளராகத் தொடர்கிறது.
  • சூரிய ஒளிமின்சக்தி, காற்றாலை மின்சாரத்தை விஞ்சி, நீர்மின்சக்திக்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கத்தக்க மின்சார ஆதாரமாக மாறும்.
  • கடந்த பத்தாண்டுகளில் காணப்பட்ட வளர்ச்சிப் போக்கை மாற்றி, உலகளாவிய எரிவாயு மூலமான மின்சார உற்பத்தி 2026-ஆம் ஆண்டில் பெரிய அளவில் மாற்றமின்றி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • சீனா மற்றும் இந்தியாவில் புதிய அணு உலைகள் செயல்படத் தொடங்குவதாலும், அமெரிக்கா மற்றும் பிரான்சில் வலுவான உற்பத்தி இருப்பதாலும், 2026-ஆம் ஆண்டில் அணுமின் உற்பத்தி அதிகரித்து, 2027-ஆம் ஆண்டில் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொழில்துறை நடவடிக்கைகள், சேவைகள் வளர்ச்சி மற்றும் வெப்ப அலைகளால் ஏற்படும் குளிரூட்டும் தேவை ஆகியவற்றின் ஆதரவுடன், 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை 7% மீண்டு வரும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • மாலை நேர உச்சபட்ச மின் தேவை தொடர்ந்து அதிகரித்து, மின் கட்டமைப்புக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையிலும், இந்தியா ஜூலை மாதத்தில் முதன்முறையாக 100 ஜிகாவாட் மாறும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விநியோகத்தைக் கடந்தது.
  • வேகமாக அதிகரித்து வரும் மாலை நேர உச்சபட்ச மின் தேவையால், நிலக்கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை தொடர்ந்து உள்ளது.
  • 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஒருங்கிணைந்த சூரிய ஒளிமின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
  • மொத்த மின் விநியோகத்தில் அதன் பங்கு 42.79 சதவீதத்தை எட்டியதுடன் இது இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக உயர்ந்த அளவாகும்.
  • உடனடி தரைவழி மாறும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 103 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 35 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை இருந்துள்ளது.
  • நீர்மின்சக்தி மற்றும் அணுசக்தியையும் சேர்த்துக் கொள்ளும்போது, புதைபடிவமற்ற மூலங்கள் மொத்த மின்சார விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன.
  • சர்வதேச எரிசக்தி முகமை (IEA) என்பது 1974-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது உலகளாவிய எரிசக்தித் துறை குறித்த கொள்கைப் பரிந்துரைகள், பகுப்பாய்வு மற்றும் தரவுகளை வழங்குகிறது.
  • IEA-வின் 32 உறுப்பு நாடுகளும் 13 கூட்டமைப்பு நாடுகளும் உலகளாவிய எரிசக்தித் தேவையின் 75%-ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
  • இது 1973 ஆம் ஆண்டு எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) கட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட்டது.
  • இதன் வெளியீடுகளில் வருடாந்திர உலக எரிசக்தி கண்ணோட்டம் மற்றும் 2050-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய அறிக்கை ஆகியவை அடங்கும்.
  • IEA-வின் அனைத்து உறுப்பு நாடுகளும் புவி வெப்பமயமாதலை 1.5 °C-ஆகக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, மேலும் IEA உறுப்பு அரசாங்கங்களில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கங்கள் 2050-ஆம் ஆண்டுக்குள் உமிழ்வு நடுநிலைமையை அடைவதற்கான உறுதிமொழிகளை அளித்துள்ளன.
  • ஆனால் அமெரிக்கா இரண்டு முறை இதிலிருந்து விலகியுள்ளது.
  • இந்தியா, 2017  ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று சர்வதேச எரிசக்தி முகமையுடன் (IEA) தனது 'இணைவு' நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரேசில் ஓர் உறுப்பினர் நாடாக ஆவதற்கான செயல்முறையைத் தொடங்கியது.
  • IEA-வின் தூய்மையான எரிசக்தி மாற்றங்கள் திட்டம், பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை முன்னுரிமை நாடுகளாக அடையாளம் கண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்