மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான (MGNREGS) மாநிலங்களின் செயல்திறன் மற்றும் அதன் கீழ் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது.
முன்னாள் ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் இந்த 9 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புறத் துறையில் நிலவும் கூலி வேலைக்கான தேவையைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளை இந்தக் குழு ஆய்வு செய்யும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது 2006 ஆம் ஆண்டில் நாட்டின் மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.
இது 2007-08 ஆம் ஆண்டில் மேலும் 130 மாவட்டங்களுக்கும், 2008-09 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப் பட்டது.
இது ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் 100 நாள் கூலியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்திற்கான தளத்தில் உள்ள தரவுகளின்படி, 2020-21 ஆம் ஆண்டில் 7.55 கோடி குடும்பங்கள் (11.19 கோடி நபர்கள்) இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.
நடப்பு 2022-23 ஆம் நிதியாண்டில், நவம்பர் 26 ஆம் தேதி வரை 5.21 கோடி குடும்பங்கள் (7.22 கோடி மக்கள்) இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.