TNPSC Thervupettagam

NFHS-6 முடிவுகள்

June 13 , 2026 15 hrs 0 min 56 0
  • இந்தியாவின் சமீபத்திய தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS-6), குழந்தைகள் ஊட்டச்சத்து, தாய்மார்களுக்கான பராமரிப்பு, மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் மற்றும் பெண்களின் இணையப் பயன்பாடு ஆகியவற்றில் முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
  • இருப்பினும், இதன் ஆரம்பக்கட்டத் தரவு அறிக்கை முந்தைய சுற்றை விடச் சுருக்கமாக உள்ளது; NFHS-5 இல் 131 குறியீடுகள் இருந்த நிலையில், இதில் 101 குறியீடுகள் மட்டுமே உள்ளன.
  • இரத்த சோகை, இறப்பு விகிதம், பிறப்பின் போது பாலின விகிதம், சுகாதாரம் மற்றும் சமையலுக்குச் சுத்தமான எரிபொருள் பயன்பாடு போன்ற முக்கியக் குறியீடுகள் இக்கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • மத்திய சுகாதார அமைச்சகம், 2023-24 ஆம் ஆண்டிற்கான NFHS-6 தரவு அறிக்கைகளை மே 29 அன்று வெளியிட்டது.
  • மணிப்பூர் தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ள சுமார் 6.8 லட்சம் குடும்பங்களிடமிருந்து இக்கணக்கெடுப்புக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டன.
  • NFHS கணக்கெடுப்பானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
  • இக்கணக்கெடுப்பை நடத்துவதற்கு 'சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம்' (IIPS) பொறுப்பேற்றுள்ளது.
  • ஆரம்பக் கட்ட முடிவுகள் பல அம்சங்களில் தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன; குறிப்பாக, கர்ப்ப காலத்தில் குறைந்தது நான்கு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் தாய்மார்களின் எண்ணிக்கை NFHS-5 உடன் ஒப்பிடுகையில் சுமார் ஏழு சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது; மேலும் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் மற்றும் பெண்களின் இணையப் பயன்பாடு ஆகியவற்றிலும் அதிகரிப்பு காணப்படுகிறது.
  • அதே வேளையில், சில அளவீடுகளில் சரிவும் காணப்படுகிறது; உதாரணமாக, ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் வழக்கம் சுமார் எட்டு சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது; நவீனக் கருத்தடை முறைகளின் பயன்பாடு 56.4%-லிருந்து 52.7%-ஆகக் குறைந்துள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட NFHS-4-இல், மாவட்ட அளவிலான மதிப்பீடுகள் மற்றும் கணக்கெடுப்புத் தரவுகளைச் சேகரிக்கத் 'டேப்லெட்' (tablet) மூலமான டிஜிட்டல் நேர்காணல் முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
  • NFHS-5-இல் குறியீடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டது; இதில் முன்பள்ளி கல்வி, மாற்றுத்திறன், கழிப்பறை வசதி, இறப்புப் பதிவு, மாதவிடாய் காலங்களில் குளிக்கும் முறைகள் மற்றும் கருக்கலைப்புக்கான காரணங்கள் மற்றும் முறைகள் போன்ற புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டன.
  • மேலும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனைகள், 15 முதல் 49 வயதுடையவர்களிடமிருந்து 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துப் பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டன. இக்கணக்கெடுப்பு 131 முக்கியக் குறியீடுகளை அளவிட்டது; இது NFHS-4-இல் இருந்த 114 குறியீடுகளை விட அதிகம்.
  • NFHS-5-இல் HIV பரிசோதனை அம்சம் நீக்கப்பட்டாலும், HIV/AIDS குறித்த அறிவு, மனப்பான்மை, முந்தைய பரிசோதனை, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பாலியல் நடத்தை தொடர்பான கேள்விகள் அதில் தக்கவைக்கப்பட்டன.
  • NFHS-6-இல், மருத்துவ, உடல் அளவீட்டு மற்றும் உயிர்வேதியியல் பரிசோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக HIV-க்கான உயிரியல் பரிசோதனை முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • HIV/AIDS குறித்த அறிவு மற்றும் மனப்பான்மை தொடர்பான அனைத்துக் கேள்விகளும் தக்கவைக்கப்பட்டனவா என்பதை NFHS-6 தரவுத் தாள் தனியாகக் குறிப்பிடவில்லை.
  • NFHS-6 கணக்கெடுப்பில் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT), சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருத்தல், டிஜிட்டல் அறிவு மற்றும் நிதிசார் பரிவர்த்தனைகள் குறித்த புதிய கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இதில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஹெபடைடிஸ்-பி (Hepatitis-B) மற்றும் ஹெபடைடிஸ்-சி (Hepatitis-C) பரிசோதனைகளும், 4-5 வயதுடைய குழந்தைகளிடமிருந்து ஹெபடைடிஸ்-பி பரிசோதனைக்காக உலர்ந்த இரத்த மாதிரி (dried blood spot) சேகரிப்பும் அடங்கும்.
  • ஆனால் முதன்முறையாக, இந்தக் கணக்கெடுப்பில் சில குறியீடுகள் நீக்கப் பட்டுள்ளன; இதன் ஆரம்ப கட்ட முடிவுகளில் மொத்தம் 30 குறியீடுகள் குறைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
  • நீக்கப்பட்ட குறியீடுகளில் குறிப்பிடத்தக்கவைகளான ரத்த சோகை (anaemia), பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதம், பிறப்பின் போது பாலின விகிதம், சமையலுக்குச் சுத்தமான எரிபொருள் பயன்பாடு மற்றும் சுகாதாரம் ஆகியவை குறைந்தது NFHS-4 கணக்கெடுப்பு முதலே இடம் பெற்றிருந்தவை ஆகும்.
  • 2015-16 ஆம் ஆண்டில் நடைபெற்ற NFHS-4 மற்றும் 2019-21-ஆம் ஆண்டில் நடைபெற்ற NFHS-5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில், அனைத்துப் பிரிவினரிடையேயும் ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளது.
  • குழந்தைகளிடையே ரத்த சோகை பாதிப்பு 58.6%-லிருந்து 67.1%-ஆகவும், 15-49 வயதுடைய பெண்களிடையே 53.1%-லிருந்து 57%-ஆகவும், கர்ப்பிணிப் பெண்களிடையே 50.4%-லிருந்து 52.2%-ஆகவும் அதிகரித்து உள்ளது.
  • நாடு முழுவதும் ரத்த சோகை பாதிப்பு அதிகரிப்பு பரவலாகக் காணப்பட்டது; 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் குழந்தைகளிடையே ரத்த சோகை அதிகரித்துள்ளதுடன் சில இடங்களில் இது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது; உதாரணமாக, அசாமில் 35.7%-லிருந்து 68.4%-ஆகவும், மிசோரமில் 19.3%-லிருந்து 46.4%-ஆகவும் அதிகரித்துள்ளது.
  • பச்சிளம் குழந்தை இறப்பு, குழந்தை இறப்பு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பு ஆகிய மூன்று இறப்பு விகிதக் குறியீடுகளும் நீக்கப்பட்டுள்ளன, இருப்பினும், இவை 'மாதிரி பதிவு அமைப்பு' (SRS) மூலம் கண்காணிக்கப்படும்; இவ்வமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 24 ஆக உள்ளது.
  • ஆனால், NFHS-இல் கிடைப்பதைப் போன்ற மாவட்ட அளவிலான தரவுகளோ அல்லது சமூக-பொருளாதார ரீதியிலான விரிவான விவரங்களோ இந்தப் பதிவு அமைப்பில் (SRS) கிடைப்பதில்லை.
  • மொத்த மக்கள் தொகையின் பாலின விகிதம் மற்றும் பிறப்பின் போது பாலின விகிதம் (NFHS-5-ல் 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என இருந்தது) ஆகிய இரண்டும் இதில் இடம் பெறவில்லை; பாலினத் தேர்வு நடைமுறைகளை அறிய உதவும் ஒரு முக்கிய குறியீடு இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளது.
  • கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் வாய்வழிப் புற்றுநோய் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு புற்றுநோய் பரிசோதனைக் குறியீடுகள் NFHS-5-இல் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன; ஆனால் ஒரே ஒரு சுற்றுக்குப் பிறகு அவை நீக்கப்பட்டுவிட்டன.
  • கணவரால் வன்முறைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக NFHS-6 அறிக்கை தெரிவிக்கிறது.
  • மேற்கு வங்கத்தில் சுகாதாரக் காப்பீட்டு வசதி பெற்ற குடும்பங்களின் விகிதம் NFHS-5-இல் இருந்த 33.7%-லிருந்து NFHS-6-இல் 88.2%-ஆக உயர்ந்து, அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களின் இணையப் பயன்பாடு 21%-லிருந்து 63.6%-ஆக உயர்ந்து, மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • ஆறு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் நடைமுறையில், ஹரியானா மாநிலத்தில் 69.5%-லிருந்து 41.2%-ஆகக் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
  • அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக வகைப்படுத்தப்பட்ட பெண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்