இந்தியாவின் அதிவேக இரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஏழு புதிய அதிவேக இரயில் வழித்தடங்களை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
முன்மொழியப்பட்ட வழித்தடங்கள் மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, பெங்களூரு-சென்னை, டெல்லி-வாரணாசி மற்றும் வாரணாசி-சிலிகுரி ஆகியவையாகும்.
உதய்பூர் விமான நிலையத்தில் GAGAN (GPS உதவியுடனான புவிசார் விரிவாக்கப்பட்ட வழிகாட்டுதல்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியா தனது முதல் செயற்கைக் கோள் அடிப்படையிலான ஜெட் விமானத் தரையிறக்கத்தை மிக வெற்றிகரமாக மேற் கொண்டது.
ககன் (GAGAN) என்பது இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான மேம்படுத்தப் பட்ட அமைப்பாகும் (SBAS) என்பதுடன் இது உலகளாவிய நிலைப் பாடு அமைப்பின் (GPS) வழி செலுத்தல் துல்லியத்தை மேம்படுத்தச் செய்வதற்காக, இஸ்ரோ (ISRO) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 26 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் நஷா முக்த் பாரத் சப்தாஹக் (போதைப் பொருள் இல்லாத இந்தியா வாரம் 2026) அனுசரிக்கப்பட்டது.
விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் சமுதாய அணுகுமுறை மூலம் போதைப் பொருள் தேவையைக் குறைப்பதற்காக, 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நஷா முக்த் பாரத் அபியான் (போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம்) திட்டத்தின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மகளிர் மன்றம், கிர்கிஸ் குடியரசின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றது என்பதோடு இதில் SCO உறுப்பு நாடுகள் பெண்களின் தலைமைத்துவம், பாலினச் சமத்துவம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பங்கேற்பு குறித்து விவாதித்தன.
தங்களது காப்பீட்டுக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்க மக்களை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 28 அன்று தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வாமை நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு, நோயறிதல் மற்றும் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு உலக ஒவ்வாமை வாரமானது, ஜூன் 21 முதல் 27 வரை அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Allergy Care is Essential Care என்பதாகும்.