இந்தியா 15 ஆண்டு காலப் பாதுகாப்புத் துறை தயார்நிலை செயல்திட்டமான 2025 ஆம் ஆண்டு தொழில்நுட்ப முன்னோக்கு மற்றும் திறன் செயல் திட்டத்தினை (TPCR-2025) வெளியிட்டுள்ளது.
நடமாடும் மாசு நீக்க அலகுகள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு உள் கட்டமைப்பு உள்ளிட்ட நம்பகமான அணுசக்தி தடுப்புக்கான நடவடிக்கைகளை இந்த செயல் திட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இதில் CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) உளவு நடவடிக்கைகளுக்கான ஆளில்லா நிலம் சார் வாகனங்கள் அடங்கும்.
NBC உணர்வுக் கருவிகள் மற்றும் மின்னணுப் போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட 1,500 கிலோ மீட்டர் தாக்குதல் வரம்பு மற்றும் 60,000 அடி உயரத்தில் இயங்கக் கூடிய ரேடாருக்குப் புலப்படாத ஆளில்லா விமானங்களை உருவாக்க இராணுவம் திட்டமிட்டு உள்ளது.
TPCR-2025 திட்டத்தில் இலக்கினைக் குறி வைத்துத் தாக்கும் ஆயுத அமைப்புகள், செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்ட இலக்கு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் ஆகியவை அடங்கும்.
எதிரி நாட்டு ஆளில்லா விமானத் திரள்களை எதிர்கொள்வதற்காக 15 கிலோ மீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டுத் தடுப்பு அமைப்புகள் மற்றும் தகவமைப்பு சார்ந்த செயல்பாட்டு முடக்க அமைப்புகளை இது முன்மொழிகிறது.