இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறன் 2025
July 20 , 2025 3 days 31 0
இந்தியா அதன் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் சுமார் 50 சதவீதத்தினைப் புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்களிலிருந்து உற்பத்தி செய்துள்ளது.
இது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDCs) நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாக இருந்தது.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப் படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறன் 484.82 GW ஆகும்.
இது வெப்ப ஆற்றல் மூலங்களிலிருந்து 242.04 GW (49.9%) மற்றும் புதைபடிவம் சாரா மூலங்களிலிருந்து 242.78 GW (50.1%) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெரும் நீர் ஆற்றல் மற்றும் அணுசக்தி ஆகியவற்றை உள்ளடக்கியது.
2021 ஆம் ஆண்டு ஐக்கியப் பேரரசின் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 பருவநிலை மாநாட்டில், இந்தியா அதன் NDC இலக்குகளின் கீழ், 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவம் சாரா எரிபொருள் வளங்களிலிருந்து அதன் ஒட்டுமொத்த மின்சாரத் திறனில் 50% இலக்கினை அடையும் நோக்கினை அறிவித்தது.
500 ஜிகாவாட் (GW) அளவிலான புதைபடிவம் சாரா மின்சாரத் திறனை நிறுவுதல், திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் குறைத்தல் மற்றும் 2030 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வுச் செறிவினை 45% குறைத்தல் ஆகியவை பிற இலக்குகளாகும்.
உலகளவில் மிகக் குறைந்த தனிநபர் உமிழ்வுகளில் ஒன்றாக இருந்த போதிலும், தங்கள் NDC உறுதிமொழிகளை நிறைவேற்றும் - அல்லது அதை விட அதிகமாக வழங்கும் சில G20 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்தியா 2025 ஆம் ஆண்டில் அதன் புதிய மற்றும் மிகவும் இலட்சிய நோக்கமிக்க NDC இலக்கினை சமர்ப்பிக்க உள்ளது.