உச்ச நீதிமன்றமானது 1989 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ள அறிவுறுத்தல்களை திரும்பப் பெற்றுள்ளது.
அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் (Protection of Civil Rights Act - PCR Act)என்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான விதிகளை நீர்த்துப் போகச் செய்தது.
2018 ஆம் ஆண்டின் தீர்ப்பு
SC மற்றும் ST சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு "முன் ஜாமீன்" வழங்க அனுமதித்தது.
மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்வதற்கு முன்னர், இச்சட்டத்தின் கீழ் ஒரு புகாரானது "பதிவு செய்வதற்குத் தகுந்ததா அல்லது பிறரின் உந்துதல் மூலம் அளிக்கப்பட்டதா" என்பது குறித்து காவல்துறை ஒரு முதல்நிலை விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
இந்த இரண்டு நிபந்தனைகளும் அசல் சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை.
மாற்றியமைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஆணை
மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அதே அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நீர்த்துப் போகச் செய்யும் அம்சங்களைத் திரும்பப் பெற்றுள்ளது.
கட்டப் பஞ்சாயத்து, கும்பல் கொலை போன்ற சட்டமன்றத்தால் சட்டம் இயற்றப்படாத வழக்குகளில் "மட்டுமே" சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் விதிக்க முடியும் என்று அது ஒப்புக் கொண்டது.
ஆனால் ஏற்கனவே ஒரு பாராளுமன்றச் சட்டம் (1989 ஆம் ஆண்டின் SC & ST சட்டம், போன்றவை) நடைமுறையில் இருக்கும் போது, நீதித்துறை அந்தச் சட்டத்தின் வரம்பிற்கு கட்டுப்படுகின்றது.
வழக்கின் பெயர்
"சுபாஷ் காசிநாத் மகாஜன் (எதிர்) மகாராஷ்டிரா மாநிலம்" என்ற வழக்கில் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.