மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒரு தீவிரமான வெப்ப அலைக்கு ஒமேகா பிளாக் வானிலை அமைப்பு காரணமாக அமைந்துள்ளதுடன் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்ப நிலை 40°C ஐத் தாண்டியுள்ளது.
ஒமேகா பிளாக் என்பது இரண்டு குறைந்த அழுத்த அமைப்புகளுக்கு இடையில் சிக்கியுள்ள ஒரு உயர் அழுத்த அமைப்பாகும், இது கிரேக்க எழுத்தான ஒமேகாவின் (Ω) வடிவத்தை உருவாக்குகிறது.
இது இயல்பான ஜெட் நீரோட்டத்தை சீர்குலைப்பதால் வானிலை அமைப்பானது 3-10 நாட்கள் அல்லது பல வாரங்களுக்கு ஒரே நிலையில் இருக்கும் படி செய்கிறது.
இந்த உயர் அழுத்தப் பகுதி வெப்பமான, வறண்ட, மேகமற்ற நிலையைத் தருகிற அதே சமயம் அதைச் சுற்றியுள்ள குறைந்த அழுத்தப் பகுதிகள் குளிர்ந்த மற்றும் ஈரப் பதமான வானிலையைப் பெறுகின்றன.
ஒமேகா பிளாக்குகளின் நிகழ்வுகளில் பருவநிலை மாற்றத்தின் விளைவு இன்னும் ஆய்வு நிலையில் உள்ள போதிலும், பருவநிலை மாற்றம் வெப்ப அலைகளின் தீவிரத்தையும் நிகழ்வெண்ணையும் அதிகரிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையானது, ஒமேகா பிளாக் நிகழ்வுகளின் போது வெப்ப அலைகளை மிகவும் தீவிரமானதாகவும் நீண்ட காலம் நீடிக்கக் கூடியதாகவும் மாற்றுகிறது.