அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் நுழைவது குறித்து ஒரு பெரிய அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தற்போது பெண்கள் கோவிலுக்குள் நுழைவதற்குத் தடை ஏதும் விதிக்கப்பட வில்லை.
பின்வரும் நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது சபரிமலை சீராய்வு மனு மீதான தீர்ப்பினை வழங்கியது.
ரோஹிந்தன் ஃபாலி நாரிமன்
டி.ஒய் சந்திரசூட்
இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
இந்து மல்ஹோத்ரா
ஏ.எம்.கான்வில்கர்
இந்தத் தீர்ப்பானது 3 : 2 என்பதின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.
நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ரோஹிந்தன் நாரிமன் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இவர்கள் இந்த அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகளின் கருத்துகளை (பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகளை) ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் இது தொடர்பான அனைத்து (56 மறுஆய்வு மனுக்கள்) சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினர்.
2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஒரு விருப்பத் தேர்வு அல்ல என்றும் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப் படுவதாகவும் அவர்கள் கூறினர்.
ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வானது பின்வரும் விவகாரங்களையும் ஆராய இருக்கின்றது.
முஸ்லீம் மற்றும் பார்சி இனப் பெண்கள் அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமத்தித்தல்.
தாவூதி போஹ்ரா முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் பிறப்புறுப்பை வெட்டுதல்.
அரசியலமைப்பின் 25 (1)வது பிரிவின் கீழ் உள்ள 'பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம்' ஆகியவற்றின் பொருளை வரையறுத்தல்.
'அறநெறி' அல்லது 'அரசியலமைப்பு அறநெறி' ஆகியவற்றின் பொருளை வரையறுத்தல்.
ஒரு மதப் பிரிவின் "அத்தியாவசிய மத நடைமுறைகளுக்கு" பிரிவு 26 இன் கீழ் அரசியலமைப்புப் பாதுகாப்பு வழங்கப் படுகிறதா என்பது குறித்து இந்த அமர்வு ஆராய இருக்கின்றது.
மதத்தின் ஒரு குறிப்பிட்ட நடைமுறையில் நீதிமன்றம் எந்த அளவிற்குத் தலையிட முடியும் என்பது குறித்தும் இந்த அமர்வு விசாரிக்க இருக்கின்றது.
முன்னதாக
2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமானது 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலில் வழிபட அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் பெயர்:
காந்தாரு ராஜீவாரு (எதிர்) இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம்.