ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அன்றே நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பின்வருமாறு மறுசீரமைக்க வழிவகை செய்கின்றது.
சட்ட சபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம்
சட்ட சபை இல்லாமல் லடாக் ஒன்றியப் பிரதேசம் (முன்பு 4 இடங்கள்)
லடாக் ஒன்றியப் பிரதேசமானது கார்கில் மற்றும் லேஹ் ஆகிய மாவட்டங்களை மட்டுமே கொண்டிருக்கும். பிற பகுதிகள் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தைச் சார்ந்தவையாகும்.
மக்களவையானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் இருந்து 4 இடங்களையும் லடாக்கானது 1 இடத்தையும் கொண்டிருக்கும்.
துணை நிலை ஆளுநர்
இந்த இரண்டு ஒன்றியப் பிரதேசங்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரின் மூலம் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்பட விருக்கின்றது. இந்த ஆட்சியாளர் துணை நிலை ஆளுநர் (LG - Lieutenant Governor) என்றறியப்படுகின்றார்.
ஜம்மு காஷ்மீர் சட்ட சபை
இந்த மசோதா ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசச் சட்ட சபைக்கு கூடுதலாக 7 இடங்களுடன் சேர்த்து மொத்தம் 114 இடங்கள் அமைக்க வழிவகை செய்கின்றது (முன்னதாக 107 இடங்கள்).
இவற்றில் சில பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீரில் இருப்பதன் காரணமாக 24 இடங்கள் காலியாக இருக்கும். மீதமுள்ள 90 இடங்கள் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்படும்.
சட்ட சபையில் பெண்கள் போதிய அளவில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தால், அச்சபையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக இரண்டு உறுப்பினர்களை துணை நிலை ஆளுநர் நியமிக்கலாம்.
பட்டியலிடப்பட்ட இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு சட்ட சபை இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்தச் சட்ட சபையானது 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும். துணை நிலை ஆளுநர் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது சட்ட சபையைக் கட்டாயம் கூட்ட வேண்டும்.
இந்த சட்ட சபை பின்வருபவை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் எந்தவொரு பகுதிக்காகவும் சட்டங்களை இயற்றலாம்.
“காவல் துறை” மற்றும் “பொது அமைதி” தவிர இந்திய அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விவகாரங்கள் மீதும்.
ஒன்றியப் பிரதேசங்களுக்குப் பொருந்துகின்ற பொதுப் பட்டியலில் உள்ள எந்தவொரு விவகாரங்கள் மீதும்.
மேலும், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திற்கான எந்தவொரு விவகாரங்கள் தொடர்பாக எந்த சட்டங்களையும் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
அமைச்சரவைக் குழு
சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில் 10 சதவிகிதத்திற்கு மிகாமல் அமைச்சர்களைக் கொண்ட குழு (அமைச்சரவைக் குழு) ஒன்று இருக்கும்.
இந்த அமைச்சரவைக் குழுவானது சட்டம் இயற்றுவதற்கு சட்ட சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து துணை நிலை ஆளுநருக்கு அறிவுரை வழங்கும்.
அமைச்சரவைக் குழுவின் அனைத்து முடிவுகளையும் ஒன்றியப் பிரதேச முதல்வர் துணை நிலை ஆளுநருக்கு தெரிவிப்பார்.
உயர் நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றமானது லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களுக்கான ஒரு பொதுவான உயர் நீதிமன்றமாகச் செயல்படும்.
மேலும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது சட்ட ரீதியிலான அறிவுரைகளை வழங்குவதற்காக அதன் ஒன்றியப் பிரதேச அரசிற்கு ஒரு தலைமை வழக்குரைஞரைக் கொண்டிருக்கும்.
சட்டமன்ற மேல்சபை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற மேல்சபையானது ஒழிக்கப்படும். இவ்வாறு ஒழிக்கப்பட்டால் மேல்சபையில் நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களும் காலாவதியாகிவிடும்.
ஜம்மு காஷ்மீரின் பழைய மாநிலச் சட்டங்கள்
ஜம்மு காஷ்மீரின் மாநிலம் சார்ந்த 153 சட்டங்கள் நீக்கப்படுகின்றன.
166 மாநிலச் சட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். 7 சட்டங்கள் சில திருத்தங்களுடன் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும்.
ஜம்மு காஷ்மீரில் நிரந்தர குடியிருப்பு வாசிகள் அல்லாத மக்களுக்கு “நிலத்தை குத்தகைக்கு” வழங்குவது மீதான தடையை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் இதில் உள்ளடங்கும்.
இதர அம்சங்கள்
பின்வரும் பிரச்சனைகளுக்காக ஆலோசனைக் குழுக்களை மத்திய அரசு அமைக்கும்.
மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகம்
ஜம்மு காஷ்மீர் மாநில நிதியியல் கழகம்
இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலக் கழகங்களின் சொத்துகள் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புகள் ஆகியவற்றைப் பிரித்துக் கொடுத்தல்.