தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை (NMW - National Minimum Wage) நிர்ணயிப்பதற்கான முறையை ஆய்வு செய்தல் மற்றும் பரிந்துரைத்தல் ஆகியவற்றிற்காக டாக்டர் அனூப் சத்பாத்தி தலைமையின் கீழ் ஒரு வல்லுநர் குழுவை மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
இந்த வல்லுநர் குழுவானது, “தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான முறையைத் தீர்மானித்தல்” என்ற அறிக்கையை 14.02.2019 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையானது தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்து முத்தரப்பு அமைப்புகளிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதற்காகவும் கலந்தறிவதற்காகவும் அமைச்சகத்தின் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொழிலாளர் கருத்தரங்கு 1957-ன் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்கள் மற்றும் 1992 ஆம் ஆண்டின் தொழிலாளர் எதிர் ரெப்டாகோஸ் பிரெட் அண்ட் கோ வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக அறிவியல்பூர்வ முறையைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள்
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிப்பதற்கு கலாச்சார ரீதியில் உண்ணக் கூடிய தகுந்த சரிவிகித சம உணவு முறை.
குறைந்தபட்ச ஊதியமானது ஆடை, எரிபொருள் மற்றும் மின்சாரம், வீட்டு வாடகை போன்ற உணவுப் பொருள் அல்லாத இன்றியமையாத பொருட்களின் மீதான நியாயமான செலவினம் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
2018 ஆம் ஆண்டு ஜூலையின் படி ஒரு நாளைக்கு ரூ.375 என்ற ரீதியில் தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கென்று தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல் (மாதத்திற்கு ரூ.9750).
ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.55 என்ற வீதம் கூடுதல் வீட்டு வாடகை படித் தொகையை அறிமுகப்படுத்துதல்.
உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாட்டின் வெவ்வேறான பகுதிகளுக்கு வெவ்வேறான தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல்.