மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – சாதிவாரி கணக்கெடுப்பு முறை
February 2 , 2026 16 days 109 0
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்; வீடுகளின் பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை நடைபெறும் என்ற நிலையில்மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) பிப்ரவரி 2027-ல் நடைபெறும்.
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பிற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சாதி வாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான பிப்ரவரி 2027-ல் நடைபெறும்.
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் பனி சூழ்ந்தப் பகுதிகளில் செப்டம்பர் 2027-ல் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டம் தொடங்குகிறது.
இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும் என்பதோடுபட்டியலின சாதிகள் (SC) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (ST) தவிர இதர மற்ற அனைத்து சாதிகளையும் கணக்கிடும் சுதந்திர இந்தியாவின் முதல் கணக்கெடுப்பாகும்.
2011 சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பானது (SECC) மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்பிற்கு வெளியே செய்யப்பட்டது.
இந்த முறை மேற்கொள்ளப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பு இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்டு, அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
2011-இன் SECC 46 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகளை கணக்கெடுத்தது, அதே சமயம் சுதந்திரத்திற்கு முந்தைய 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 ஆக இருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படுவது இதுவே (2027) முதல் முறை ஆகும்.
மேலும், குடிமக்கள் இணையதளத்தின் மூலம் சுயமாகத் தகவல்களைப் பதிவு செய்ய முடிவதும் இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவின் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஜனவரி 22 அன்று, வீட்டுப் பட்டியல் கட்டத்திற்காக 33 வினாக்களை அறிவித்தார்.
இந்த வினாத்தாளில் 12வது வினாவாக “குடும்பத் தலைவர் பட்டியலின சாதியினரா / பழங்குடியினரா/மற்றவர்களா?” என்பதாகும்.
வினா 12, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பொதுப் பிரிவினரை வெளிப்படையாக உள்ளடக்கவில்லை.
2011 ஆம் ஆண்டு வீட்டுப் பட்டியல் கட்டத்திற்கான அட்டவணை அல்லது வினாத் தாளிலும் இதே வினா 15வதாக இருந்தது.
பட்டியல் சாதி / பழங்குடியினர் பிரிவின் விவரங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட பட்டியல் மூலம் இரண்டாம் கட்டத்தில் நிரப்பப்பட்டன.
ஓபிசி பட்டியல் மாநில மற்றும் மத்திய அரசுகளால் பராமரிக்கப்படலாம் என்றாலும், பட்டியலின சாதி / பழங்குடியினர் பெயர்கள் மத்திய அரசால் மட்டுமே பராமரிக்கப் படுகின்றன.
சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, மத்தியப் பட்டியலில் சுமார் 2,650 இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரும், பட்டியலின சாதிப் பிரிவில் 1,170 சமூகங்களும், பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலில் 890 சமூகங்களும் உள்ளன.
“மற்றவை” என்ற பத்தியில் மத்திய மற்றும் மாநில ஓபிசி பட்டியல்கள் இணைக்கப் பட்ட பட்டியல் இருக்குமா அல்லது இடஒதுக்கீடு செய்யப்படாத சாதிப் பிரிவுகளின் பட்டியல் இருக்குமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.