மருந்துகளின் விலை நிர்ணயத்தை கண்காணிப்பதற்கான குழு – நிதி ஆயோக்
January 24 , 2019 2384 days 736 0
மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து கண்காணிப்பதற்காக நிதி ஆயோக்கின் தலைமையில் ஒரு நிலைக் குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
நாட்டிலுள்ள மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை இது மேற்கொண்டால் தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் (National Pharmaceuticals Pricing Authority - NPPA) அதிகாரங்கள் பறிக்கப்படும் நகர்வாக இது இருக்கும் என்று அறியப்படுகிறது.
மலிவு விலையிலான மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகள் மீதான நிலைக் குழுவானது நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) தலைமையில் செயல்படும்.
மருந்துகளின் விலை மற்றும் சுகாதார சேவைகள் குறித்து NPPAக்கு பரிந்துரைக்கும் அமைப்பாக இக்குழு செயல்படும்.
இக்குழு தானாகவோ அல்லது மருத்துவத் துறை, NPPA அல்லது சுகாதாரத்துறை ஆகியவற்றின் பரிந்துரைகளினாலோ பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யும்.
NPPA ஆனது தன்னாட்சி உடைய ஒழுங்குமுறை அமைப்பாக 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
சுகாதார அமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய இன்றியமையாத மருந்துப் பொருட்கள் பட்டியலில் (National List of Essential Medicines - NLEM) உள்ள மருந்துகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்வது, அவற்றை மேற்பார்வையிடுவது மற்றும் விலை வரம்பை நிர்ணயம் செய்வது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.