சமீபத்தில் இந்தியாவின் தலைமைப் பதிவாளர் 2018 ஆம் ஆண்டிற்கான தனது மாதிரிப் பதிவுகள் முறை (SRS - Sample Registration System) அறிக்கையில் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விகிதங்கள் மொத்த மக்கள் தொகையில் ஆயிரம் நபர்களுக்கு என்ற அளவில் கணக்கிடப் படுகின்றது.
SRS என்பது தேசிய மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம், பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இதர பிறப்பு மற்றும் இறப்புக் குறிகாட்டிகளின் நம்பத் தகுந்த வருடாந்திரக் கணிப்புகளை வழங்குவதற்கான மக்கட் தொகை சார்ந்த ஓர் ஆய்வாகும்.
இந்தியாவின் தலைமைப் பதிவு அமைப்பானது 1961 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும்.
2018 ஆம் ஆண்டு SRS-ன் சிறப்பம்சங்கள்
இந்தியாவின் பிறப்பு விகிதமானது 1971 ஆம் ஆண்டில் 36.9 லிருந்து 2018 ஆம் ஆண்டில் 20 ஆகக் குறைந்துள்ளது.
பிறப்பு விகிதமானது கடந்த 40 ஆண்டுகளாக நகர்ப்புறப் பகுதிகளுடன் ஒப்பிடப்படும் போது கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக தொடர்ந்து நீடிக்கின்றது.
பிறப்பு விகிதத்தில் பீகார் மாநிலம் (26.2) தொடர்ந்து முதலிடத்திலும் அந்தமான் நிக்கோபர் தீவானது (11.2) கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் இறப்பு விகிதமானது 1971 ஆம் ஆண்டில் 14.9லிருந்து 2018 ஆம் ஆண்டில் 6.2 ஆகக் குறைந்துள்ளது.
இந்தக் குறைவானது கிராமப்புறப் பகுதிகளில் மிக அதிக அளவில் உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலமானது 8 என்ற அளவில் மிக உயரிய இறப்பு விகிதத்தையும் தில்லியானது 3.3 என்ற அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டு உள்ளன.
பச்சிளங் குழந்தை இறப்பு விகிதமானது (IMR - Infant mortality rate) 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது 129 என்ற அளவிலிருந்து தற்போது 32 ஆகக் குறைந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலமானது 48 என்ற அளவில் மிக அதிக IMRயையும் நாகாலாந்து 4 என்ற அளவில் மிகக் குறைந்த IMRயையும் கொண்டுள்ளன.