நெய்யாறு நதிநீர் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்டரீதியான பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் உள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
நெய்யாறு பாசனத் திட்டம் 1951 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு எவ்வித முறையான எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் 1958 ஆம் ஆண்டு முதல் நெய்யாறு இடதுகரை கால்வாய் மூலம் தமிழ்நாடு பாசன நீரைப் பெறத் தொடங்கியது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 9,000 ஏக்கர் உட்பட 36,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டது.
பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில், கேரளா சுமார் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு 150 கன அடி நீரை வழங்கி வந்தது.
2004 ஆம் ஆண்டில், கேரளா நெய்யாறு நதிநீர் வழங்குவதை நிறுத்தியது என்பதால் அது நதிநீர் பகிர்வு மற்றும் நெய்யாறு மாநிலங்களுக்கு இடையேயான நதியா என்பது குறித்த பிரச்சினைக்கு வழி வகுத்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு 2012 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை அணுகியதுடன் இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது மற்றும் இதற்கான வாதங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.