TNPSC Thervupettagam

சிலிர்ப்பைத் தந்த கடலாமைகள்

May 4 , 2024 14 days 184 0
  • என்னுடைய பறவை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ‘இறந்த பறவைகளைக் கண்டால் தெரியப்படுத்துங்கள்’ என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போதோ ‘ஆமைகளைக் கண்டாலோ, ஆமை சென்ற தடங்களைக் கண்டாலோ தெரியப்படுத்துங்கள்’ என்று மரக்காணம் பகுதி மீனவர்களிடம் சொல்லிவருகிறேன்.
  • ஆமைகளில் நன்னீர் ஆமை, கடலாமை என இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கடலாமைகள் இனப்பெருக்கக் காலத்தில் முட்டையிட மட்டுமே கடற்கரைக்கு வந்து, முட்டையிட்டு விட்டுச் சென்றுவிடுகின்றன. கடலாமை வகைகளிலேயே சிறிய இனம் பங்குனி ஆமைகள் (Olive Ridley). இது உலக அளவில் அபாயத்தில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் சென்னை, புதுச்சேரி ஆகிய கடற்கரைகளில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலாமைகள் முட்டைகளை இடுகின்றன. இவை எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, பெரும்பாலும் அதே கடற்கரையைத் தேடி வந்து முட்டையிடுவது ஆச்சரியமளிக்கும் செய்தி.

தடம் பார்த்த அனுபவம்:

  • ஒருநாள் அதிகாலை வனச்சரக அலுவலரிடமிருந்து ஆமை முட்டை இட்டுள்ளதாகத் தகவல் வந்தது. உடனே வேட்டைத் தடுப்புக் காவலருடன் முட்டைகளைச் சேகரிக்கச் சென்றேன்.
  • தகவல் கொடுத்த மீனவர் சொன்ன பகுதியில் ஆமை வந்த தடத்தைப் பார்த்தேன். கடலாமையால் நீரையும் தள்ளி நீந்த முடிகிறது, மணலையும் தள்ளி நகர முடிகிறது. அதன் தடத்தைப் பார்த்தது எனக்கு முதல் அனுபவம் என்பதால் என் உடல் சிலிர்த்தது. இந்தக் காலத்து இளைஞர்கள் எது எதற்கோ ‘வைப்’ ஆகிறார்கள். இயற்கையின் ஆச்சரியங்களைப் பார்க்கும்போது வரும் இயல்பான சிலிர்ப்புதான் எனக்கு ஏற்பட்டது.
  • காவலர் தன் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டே வந்தார். சட்டென்று நின்றார். இரண்டு, மூன்று இடங்களில் அகலமான வட்டக் குழிகள் தென்பட்டன. குழிகளைத் தோண்ட ஆரம்பித்தார். இரண்டு அடி ஆழத்தில் முட்டைகள் தெரிந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள்! மிகவும் கவனமாக முட்டைகளை எடுத்து, பையில் அடுக்கினார். ஒவ்வொன்றும் டேபிள் டென்னிஸ் பந்து வடிவத்திலும், அதே நேரம் மேல் ஓடு கடினத்தன்மை இல்லாமலும் இருந்தன.
  • பொரிப்பகத்தில்... ஆமை முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தில், இரண்டு அடியில் குழி தோண்டி, எடுத்த முட்டைகளை வனக் காவலர் அடுக்கினார். இந்தப் பொரிப்பகம் ஆமைகளின் இனப்பெருக்கக் காலம் தொடங்கும் முன்பே தயார்செய்யப்பட்டிருந்தது.
  • ஆமை முட்டையிட்டுள்ள இடம் சுத்தமில்லாமல் இருந்தால் முட்டைகளைப் பூஞ்சை தாக்கி, பொரிக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியில் வரும்போது குச்சிகள், கற்கள் போன்ற தடைகள் இருந்தால் அவற்றை எதிர்கொண்டு அவை மேலே வருவதும் கடினம். அதில் சில குஞ்சுகள் இறந்துவிடும் என்பதால் பொரிப்பகம் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.
  • ஆமை முட்டைகளை வைக்கும் ஒவ்வொரு குழியிலும் தேதி, முட்டைகளின் எண்ணிக்கை, முட்டையிட்ட இடம் ஆகிய தகவல்களை எழுதி வைத்தோம்.
  • முட்டையிட்டு 45 முதல் 50 நாள்களில், முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியில் வர ஆரம்பிக்கும். உடனே வெப்பம் தாங்காமலும் பறவைகளுக்கு உணவாகவும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடும் என்பதால், 40ஆவது நாள் ஆகும்போது குறிப்பிட்ட குழிகளில் கூடையைக் கவிழ்த்து வைத்துவிட்டோம். நாள்தோறும் அந்தக் குழியைக் கண்காணித்தோம், 48ஆவது நாள் காலை ஆமை முட்டைகள் பொரிந்த தகவல் வந்தது. கேமராவுடன் புறப்பட்டோம்.
  • இரண்டு ஆமைக் குஞ்சுகள் மணலைத் தொட்டுக்கொண்டிருந்தன. குழியை மெதுவாகத் தோண்ட ஆரம்பித்தார் வனக் காவலர். இரண்டு அடியில் குஞ்சுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு சில முட்டைகள் சுருங்கி இருந்தன. அவை இனிமேல் பொரிக்க வாய்ப்பில்லை என்றார் காவலர்.
  • கவிழ்த்து வைத்திருந்த அதே கூடையில் ஒவ்வொரு குஞ்சாக எடுத்துவைத்தார். பிறகு கடலுக்கு 20 அடி தூரத்தில் கூடையை வைத்து, ஒவ்வோர் ஆமைக் குஞ்சாக எடுத்து வெளியில் விட்டார். எந்தத் திசை நோக்கிக் குஞ்சுகளை விட்டாலும் அவை மிகச் சரியாகக் கடலை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தது பிரமிப்பாக இருந்தது!
  • சில குஞ்சுகள் மெதுவாகவும், சில அவற்றுக்கு முன்பிருந்த குஞ்சுகளின் மீது முட்டிமோதியும் மேலேறியும் கடலுக்குள் சென்றபோது, அலைகள் அவற்றை அன்போடு வாரி அணைத்துக்கொண்டன!

இப்படிச் செய்யலாமா?

  • எவ்வளவோ தடைகளைக் கடந்து, இந்தப் பூமியில் வாழ்வதற்கு உயிர்கள் போராடுகின்றன! இயற்கையான போராட்டமாக இருந்தால், அவை மேலெழுந்து வந்துவிடும். ஆனால், இயற்கையின் சுழற்சியில் தேவையின்றித் தலையிடும் மனித இனத்தால், ஆமைகள் தங்கள் வாழ்க்கையைத் தொடர பல்வேறு வகைகளில் கஷ்டப்படுகின்றன.
  • உலகில் இயற்கைதான் சிறந்த பேரதிசயம்! ஆனால், நாம் இயற்கையைச் சில நொடிகளுக்கு மட்டும் ரசிக்கிறோமே தவிர, தக்கவைத்துக்கொள்ள நினைப்பதில்லை. அதனால்தான் கடற்கரைகளில் கழிவுகளைக் கொட்டுகிறோம். மரக்காணம் கடற்கரையில் பல்வேறு சடங்குகள் நடைபெறுகின்றன. சடங்குகளின் ஒரு பகுதியாக கடற்கரையிலேயே சிறிய அளவில் வேள்வித்தீ வளர்க்கப்படுகிறது. அந்தச் சடங்குகள் முடிந்த பிறகு கழிவுகளையும் பொருள்களையும் அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
  • யோசித்துப் பாருங்கள், அந்தச் சின்னஞ்சிறு ஆமைக் குஞ்சுகள் மணல் கூட்டுக்குள் இருக்கும்போது இப்படித் தீ வைத்தால், மணலுக்குள் இருந்து வெளியே வரும்போது கழிவுகளை வெளித்தள்ளிக்கொண்டு கடற்கரையை எப்படிச் சென்றடையும்? ஆமைகளும் நம்மைப் போன்று இந்த உலகில் உயிர் வாழ நினைக்கும் ஓர் உயிரினம்தானே. அதைவிட மேம்பட்ட அறிவைக் கொண்ட நாம் இப்படிச் செய்யலாமா?

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories