TNPSC Thervupettagam

சுதந்திர தேவியும் சுதந்திரமில்லாப் பெண்களும்

April 28 , 2024 15 days 83 0
  • பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் 1776இல் விடுதலை பெற்றதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தேவி’ சிலையைப் பரிசாக வழங்க பிரான்ஸ் முடிவெடுத்தது. அதற்குத் தன் நாட்டு மக்களிடமிருந்தும் நிதி திரட்டியது. நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் ‘விடுதலையே உலகுக்கு ஒளியூட்டும்’ என்கிற புகழ்பெற்ற பாடலும் அடங்கும்.
  • சிலை இறுதிவடிவம் பெறத் தாமதம் ஆனதால் நூற்றாண்டுக்குப் பத்து ஆண்டுகள் கழித்து 1886இல் ‘சுதந்திர தேவி’ சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அப்போதைய அமெரிக்கப் பிரதமர் குரோவர் கிளீவ்லேண்ட். விடுதலையின் உன்னதம் குறித்து அவர் எழுச்சியுரை ஆற்றுகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் லில்லி டெவ்ரொ பிளேக் தலைமையில் படகுகளில் அணிவகுத்தனர். அவர்களின் கைகளில் ‘அமெரிக்கப் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை’ என்று எழுதப்பட்ட பதாகைகள் இருந்தன. நாட்டின் விடுதலையைக் கொண்டாடும் தருணத்தில் தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்துக் கவனப்படுத்திய லில்லி பிளேக், பெண்களின் வாக்குரிமைக்காகக் குரல்கொடுத்த பெண்ணுரிமைப் போராளிகளில் ஒருவர்.
  • இன்றைக்கு ஜனநாயக நாடுகளில் குடிமக்களின் அடிப்படைக் கடமையாகவும் உரிமையாகவும் கருதப்படுகிற வாக்குரிமை ஒரு காலத்தில் பெண்களுக்கும் சமூகத்தில் சில பிரிவினருக்கும் மறுக்கப்பட்டது. காலத்துக்கும் நாடுகளுக்கும் ஏற்ப வாக்குரிமைக்கான தகுதிகளும் வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டன. பொருளாதாரம், வர்க்கம், பாலினம், வயது போன்றவை வாக்குரிமையில் மிக முக்கியப் பங்கு வகித்தன. காரணம், நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் அமர்வது என்பது அதிகாரத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பது. அதனால், அதிகாரத்தில் இருப்போர் மட்டுமே ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றனர். வாக்குரிமைக்கான தகுதிகளாக அன்றைய நாடுகள் நிர்ணயித்த தகுதிகளில் ஒன்றுகூடப் பெண்களுக்கு இல்லாத வகையில் பெண்ணடிமைத்தனம் நிலவிய காலம் அது. அதை எதிர்த்து 1800களில் பெண்கள் போராடத் தொடங்கினர். அவர்கள் முதல் அலை பெண்ணியவாதிகள் என வகைப்படுத்தப்பட்டனர். லில்லி பிளேக், முதல் அலை பெண்ணியவாதிகளுள் ஒருவர்.

குறைவும் நல்லதே

  • வடக்கு கரோலினாவில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் லில்லி. வீட்டுக்கே ஆசிரியரை வரவழைத்துக் கல்வி கற்கும் அளவுக்கு அவர்களுக்குச் செல்வாக்கு இருந்தது. திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்ததும் லில்லியின் கணவர் இறந்துவிட, கையில் பணமின்றித் தவித்தவருக்கு எழுத்துதான் கைகொடுத்தது. ஏழு ஆண்டுகளில் ஐந்து நாவல்களை எழுதினார். பெண்கள் எழுதுவதைப் பொதுச் சமூகம் விரும்பாததால் ‘டைகர் லில்லி’ என்கிற புனைபெயரில் எழுதினார். பிறகு கிரின்ஃபில் பிளேக் என்பவரை மறுமணம் புரிந்துகொண்டார். அதன்பிறகு பொதுவாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினார். பெண்களின் வாக்குரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் நியூயார்க் நகர வாக்குரிமைச் சங்கத்தில் இணைந்து அதன் தலைவராகவும் உயர்ந்தார்.
  • பிறகு அமெரிக்கப் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்திலும் தலைவரானார். உழைக்கும் பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார். பெண்களின் வாக்குரிமை, சொத்துரிமை, தொழிற்சாலைகளில் பெண் ஆய்வாளர்களை நியமித்தல், மருத்துவத்துறையிலும் காவல்துறையிலும் அரசியலிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் போன்றவற்றை வலியுறுத்தி பேசியும் எழுதியும் வந்தார். ஆணுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற உந்துதலே லில்லி பிளேக்கைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடத் தூண்டியது. இவர் தனியாகப் போராடவில்லை, மலையைப் புரட்டிப்போட்டுவிடவும் இல்லை. ஆனால், ஆணாதிக்கத்தை லேசாக ஆட்டம் காணச் செய்தார்.
  • சுருக்கமாகச் சொன்னால் லுக்ரிஷா மாட், எலிசபெத் ஸ்டாண்டன், சோஜர்னர் ட்ரூத், சூசன் அந்தோணி போன்றவர்களின் தொடர் செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில் இவரது பங்களிப்பு ‘மிகக் குறைவு’. ஆனால், ‘மிகக் குறைவு’ம் நமக்குத் தேவைதான். எதுவுமே இல்லாததைவிடக் ‘குறைவு’ நல்லதுதானே. தவிர, அந்தக் ‘குறைவு’தான் பின்னாளில் ‘குறிப்பிடத்தகுந்த’ அளவாகவும் ‘பெருந்திரளா’கவும் மாறக்கூடும். ‘தனியாக என்னால் எதைச் சாதித்துவிட முடியும்’ எனத் தயங்கிப் பின்வாங்கும் பெண்களுக்கு லில்லி பிளேக்ஸ் போன்றவர்கள் நம்பிக்கையை அளிக்கிறார்கள்.

முன்னோடி அரசாணை

  • இவரைப் போலவே பெண்களின் வாக்குரிமைக்காக உலகம் முழுவதும் போராடிய பெண்கள் பலர். தொடர் போராட்டங்களின் விளைவாக இருபதாம் நூற்றாண்டில்தான் பெரும்பாலான நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன. அதுவும் அனைத்துப் பெண்களுக்குமானதாக அமையவில்லை. அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தபோது ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை அளிக்கப் படவில்லை.
  • கனடாவில் பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டபோது ஆசியாவிலிருந்து குடியேறியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. தென்னாப்ரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டபோதும் நிறப்பாகுபாட்டின் காரணமாகக் கறுப்பினப் பெண்கள் வாக்குரிமை பெற 60 நெடும் ஆண்டுகள் காத்திருக்க வைக்கப்பட்டனர். சில நாடுகளில் வாக்குரிமைக்கான வயதில்கூடப் பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டது. ஐஸ்லாந்தில் 25 வயது ஆண்கள் வாக்களிக்கலாம் என்கிற நிலையில் பெண்களுக்கான வாக்குரிமை வயது 40 என 1915இல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து 1920இல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கலாம் எனமாற்றப்பட்டது.
  • விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. முன்னேறிய நாடுகள் பலவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 1921இல் அரசாணை வெளியிட்டது நீதிக்கட்சி தலைமையிலான அரசு. பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதை இந்த ஆணை (அரசாணை 108, 10/05/1921) தடை செய்ததன் மூலம் வாக்குரிமையில் சமத்துவத்தை நிலைநாட்டியது.
  • பெண்களின் வாக்குரிமைக்காகப் பலரும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த போது ஆப்ரிக்க அமெரிக்கப் பெண் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு களங்களில் போராடினார். அவர் யார்? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories