TNPSC Thervupettagam

திருநெல்வேலி புள்ளினங்கள்

April 27 , 2024 12 days 93 0
  • திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்காக உடைமைகளை எடுத்துத் தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். ரயில் ஜன்னலைக் குனிந்து பார்த்தவாறே நடைமேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான். எதிர்த் திசையில் இருந்த இருக்கையில் அவனை அமரச் சொன்னேன். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. என்ன படிக்கிறாய் என்றேன். பதினோராம் வகுப்பு என்றான்.
  • ‘திருநெல்வேலின்னா என்னென்னலாம் ஞாபகம் வரும்?' என்று கேட்டேன். ‘அல்வா என்றான்.‘சரி, அப்புறம்...’ என்றேன். ‘தாமிரபரணி’ என்றான். ‘அடுத்து...’ என்றேன். ‘கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்’ என்றான். அந்தப் பதிலில் ஒரு துள்ளல் அவனிடம் தெரிந்தது. எனக்கோ அந்தக் கணம் மயிர்க்கூச்செறியும் ஓர் உன்னத நிலை. நான் திருநெல்வேலிக்கு வந்ததே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைக் காண்பதற்குத்தான்.
  • இனி அவனிடம் கேட்க நினைக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் கட்டபொம்மன், பாளையங்கோட்டை, பாரதியார், வ.உ.சி, குற்றாலம், மணிமுத்தாறு, பாபநாசம், நெல்லையப்பர் கோயில் என்று பதில்கள் விரியும். ஆனால், அவன் முகத்திலோ ரயில் நிலையத்தின் நடைமேடையைக் கண்டுவிட்ட உற்சாகம் தெரிந்தது. அதே உற்சாகத்துடன் நானும் ஒரு புன்முறுவலுடன் அவனை வழியனுப்பி வைத்தேன்.

நெல்லையின் சிறப்பு:

  • பறவைகள் வரலாற்றில் தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெரும் சிறப்பு திருநெல்வேலிக்கு உண்டு. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டமே பறவைகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. இதுவரை சுமார் 430 பறவை வகைகள் அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • இரண்டாவதாக திருவெல்வேலி மாவட்டத்தில் 374 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆறுகள், குளங்கள், புல்வெளி எனப் பல வகையான வாழிடங்களைக் கொண்டிருப்பதால் அத்தனை வகையான பறவைகள் தென்படுவது சாத்தியமே.
  • ஆனால், மேற்கண்ட வாழிடங்களோடு கூடுதலாகக் கடற்கரைப் பறவைகளையும் காண முடியும் என்பதே திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பம்சம். இருப்பினும் ஏன் பறவை வகைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது? பறவை ஆர்வலர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கோவை. திருநெல்வேலி பறவை ஆர்வலர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் பறவைகளைப் பார்த்து ebird இணையதளத்தில் பட்டியலைச் சமர்ப்பித்தால் நிச்சயம் கோவையின் பறவை எண்ணிக்கையை அவர்கள் தாண்டிவிடக்கூடும்.

பறவைகளுக்கு மரியாதை:

  • கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் சுமார் 224 பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக்கு அவ்வூரில் வசிக்கும் பறவை ஆர்வலர் பால் பாண்டியும் ஒரு காரணம். ஆண்டாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான பறவைகளின் வருகையாலும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிற காரணத்தினாலும்தான் கூந்தன்குளம் ஏரி 1994ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் கூடுகட்டிக் குஞ்சு பொரித்து வளர்ந்த பிறகு திரும்பப் பறந்து செல்கின்றன என்பது பொதுவான ஒரு கற்பிதம். ஆனால், வெளிநாட்டுப் பறவைகள் நம் நாட்டில் கூடு கட்டுவதில்லை. உணவுத் தேவைக்காக மட்டுமே நம் நாட்டிற்கு வருகின்றன. ஒரு பறவை எங்கு கூடு அமைக்கிறதோ, அதுவே அந்தப் பறவையின் தாய்வீடு. நம் பறவைகள் கூடு அமைக்கிற இடம் பாதுகாப்பாக இருப்பதால், வெளிநாட்டுப் பறவைகளும் அவ்விடத்தில் இளைப்பாறுகின்றன, அவ்வளவே.
  • கிராம மக்களும் ஊருக்குள் கூடமைக்கும் பறவைகளுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படுத்துவதில்லை. திருநெல்வேலி மாவட்ட மக்கள், குறிப்பாகக் கூந்தன்குளம் மக்கள் பறவைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

பட்டைத்தலை வாத்து:

  • காலை 8 மணி இருக்கும். சரணாலயத்திற்கு ஐந்து கிலோமீட்டர் முன்பாக மூலக்கரைப்பட்டி என்னும் ஊர்க் குளத்திலேயே நானும் நண்பன் பூர்ணாவும் நின்றுவிட்டோம். கணக்கில் அடங்காத பட்டைத்தலை வாத்துகள் (Bar headed geese) அங்கே தரையில் மேய்ந்துகொண்டிருந்தன.
  • இந்தப் பறவைகள் ரஷ்யா, மங்கோலியாவிலிருந்து புறப்பட்டு சுமார் 7,000 மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து, இமயமலையைக் கடந்து சுமார் 5,500 கிலோமீட்டர் தெற்கு நோக்கிப் பறந்து திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ளன.
  • நானும் பூர்ணாவும் கூந்தன்குளம் சரணாலயத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு அவ்வளவாகப் பறவைகள் இல்லை. குஞ்சுகளுக்கு உணவூட்டவும் தமக்கும் இரை தேடியும் பறவைகள் போய்விட்டிருந்தன. எங்கள் தாமதத்தால் அன்று பறவைகளைப் பார்க்க இயலவில்லை. மாலை வரை காத்திருந்தால் கூடடையும் நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகளைக் காணலாம். ஆயினும் மூலக்கரைப்பட்டியிலே, அதன் தாக்கத்தை உணர்ந்துவிட்டோம். அதுவரையில் சுமார் எண்பது வகையான பறவைகளைப் பார்த்திருந்தோம்.

பறவை கவிதைகள்:

  • நான் பறவைகளின் பெயர்களைச் சொல்லி, அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டிருந்தேன். ஆனால், நண்பன் பூர்ணாவோ பறவைகளைப் பார்த்துக் கவிதை வடிக்க ஆரம்பித்துவிட்டான். பல வகையான பறவைகளைக் கண்டுகளித்தாலும் பனை மரத்தில் கூடு கட்டியிருந்த கூழைக்கடா பூர்ணாவுக்கு மனதில் தங்கிப்போனது. அவன் குற்றாலக் குறவஞ்சி பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கூழைக்கடாவை நினைவுகூர்ந்து சொன்னான்.

“வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!

வருகினும் ஐயே! திரிகூட நாயகர்

வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம்

குருகும் நாரையும் அன்னமுந் தாராவும்

கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்....

  • திருநெல்வேலி மண்ணில் நாங்களும் 101 பறவைகளைப் பதிவுசெய்து ஊர் திரும்பத் தயாராக இருந்தோம். அந்த வேளையில் பறவைகளின் வலசைக் காலமும் முடிந்து புலம்பெயரத் தயாராயிருந்தன.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு

  • - மூதுரை 17
  • ஆம். திருநெல்வேலி மண்ணும் பறவை இனங்களுக்கு ஆம்பலும் நெய்தலும் போல ஒட்டிய உறவுதான். அப்படியான திருநெல்வேலி மண்ணை நேசிக்க எத்தனையோ காரணங்கள் உண்டு. இயற்கையை நேசித்துவிட்டால் நாம் எந்த மண்ணையும் நேசித்துவிடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27– 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories