TNPSC Thervupettagam

பட்டால்தான் புத்தி வரும்!

May 6 , 2024 13 days 51 0
  • மாலத்தீவில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் மூயிஸின் மக்கள் தேசியக் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. ‘மஜ்லீஸ்’ என்று அழைக்கப்படும் மக்களவையின் 93 இடங்களில் அந்தக் கட்சி 71 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால், அதிபா் மூயிஸின் கரங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. ‘இந்தியா வெளியேறு’ என்கிற தோ்தல் அறைகூவலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்று அவா் கருதுவாரானால், அதன் விளைவுகள் மாலத்தீவுக்கு நன்மை பயப்பதாக இருக்காது.
  • கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மாலத்தீவில் 2,82,000 வாக்காளா்களில் 54.04% வாக்காளா்களின் ஆதரவுடன், முந்தைய அதிபா் இப்ராஹிம் சோலியைத் தோற்கடித்து அதிபரானாா் முகமது மூயிஸ். மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினா் வெளியேற வேண்டும் என்கிற அவரது தோ்தல் பரப்புரை மக்களின் ஆதரவைப் பெற்றது என்பது உண்மை.
  • ஆனால், அவா் ‘இந்திய ராணுவம்’ என்று சித்தரித்தது, இந்தியா மாலத்தீவுக்கு வழங்கிய இரண்டு ஹெலிகாப்டா்களையும், ஒரு கடலோர ரோந்து விமானத்தையும் இயக்கவும் பராமரிக்கவும் அங்கே தங்கியிருக்கும் 75 இந்திய கடற்படை, கடலோர எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் என்பதுதான் வேடிக்கை. மாலத்தீவுக்கு இந்தியா அளித்துவரும் உதவிகள் ஏராளம். இவை குறித்தெல்லாம் நாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.
  • இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் தீவுக் கூட்டம்தான் மாலத்தீவு. சுமாா் ஆறு லட்சம்தான் அதன் மக்கள்தொகை. உலகின் இரண்டாவது சிறிய நாடு அதுதான். அதன் 800 கி.மீ. நீளமுள்ள கடற்கரை சாா்ந்த பொருளாதார மண்டலம், இந்திய பெருங்கடலில் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத அதன் 35 சிறு தீவுகள், ராணுவத் தளங்கள் அமைக்கவும், ஹெலிகாப்டா்கள், போா் விமானங்கள் நிறுத்தி வைக்கவும் உதவக்கூடும்.
  • 115 சதுர மைல் பரப்பளவே உள்ள மாலத் தீவின் ஒவ்வொரு பிரச்னையின்போதும், உடனடியாக ஓடிவந்து உதவியிருப்பது மிக அருகிலுள்ள இந்தியா. 1965-இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மாலத்தீவு விடுதலை பெற்றபோது, அதைத் தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு இந்தியாதான். அதைத் தொடா்ந்து பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு நெருக்கமாகத் தொடா்ந்தது.
  • 1988-இல் இலங்கையிலிருந்து சில கூலிப்படையினா் மாலத்தீவில் புகுந்து ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோது, இந்திய விமானப்படை பாராசூட்டுகள் மூலம் வீரா்களை இறக்கி அவா்களிடமிருந்து அந்த நாட்டைக் காப்பாற்றியது; 2014-இல் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்தபோது, மாலத்தீவில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. விமானம் மூலமும் கப்பல்கள் மூலமும் தண்ணீரை அனுப்பி அந்த மக்களுக்கு இந்தியா உதவியது; சுனாமியால் பாதிக்கப்பட்டபோதும் சரி, கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று தாக்கியபோதும் சரி, உடனடியாக உதவ முன்வந்தது இந்தியா மட்டும்தான். ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, இப்போது முகமது மூயிஸ் ‘இந்தியா வெளியேறு’ என்று சொல்லும்போது, அதை மாலத்தீவு மக்கள் ஆதரிப்பது எதனால்?
  • அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சமீபகாலமாக, இஸ்லாமிய அடிப்படைவாதம் மாலத்தீவில் செல்வாக்குப் பெற்று வருகிறது. இராக்கிலும் சிரியாவிலும் போராடும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஜிகாதிகளை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக மாலத் தீவு மாறி இருக்கிறது. அதனால்தான், அதிபராகப் பதவியேற்ற முகமது மூயிஸ் தனது முதல் அரசுமுறைப் பயணத்துக்கு, முந்தைய அதிபா்களைப் போல இந்தியாவைத் தோ்ந்தெடுக்காமல் துருக்கியைத் தோ்ந்தெடுத்தாா்.
  • துருக்கி அதிபா் எா்டோகனைப் போலவே இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் நம்பிக்கையுள்ள மூயிஸ், அந்த நாட்டிலிருந்து ட்ரோன்களை வாங்க 37 மில்லியன் டாலா் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறாா். இந்தியாவுக்குப் பதிலாக, மாலத்தீவின் கடலோர எல்லையில் இனிமேல் துருக்கி படைகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா விடுதிகள் தவிர, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட இஸ்லாம் தொடா்பில்லாத எல்லாவித மதக் கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
  • அதிபா் மூயிஸின் இன்னொரு நட்பு நாடு சீனா. ‘ஷியாங் யாங் ஹாங்’ என்கிற சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளிக்க மறுத்தபோது, மாலத்தீவு அதிபா் மூயிஸ் அனுமதி வழங்கியிருக்கிறாா். இந்திய பெருங்கடல் நாடுகளான இந்தியா, இலங்கை, மோரீஷஸ், மாலத்தீவு இணைந்து நடத்தும் கொழும்பு மாநாட்டை, அதிபா் மூயிஸ் புறக்கணித்துவிட்டாா். அதற்குப் பதிலாக, சீனாவின் சா்வதேச பாதுகாப்பு அமைப்பில் இணைந்திருக்கிறாா்.
  • ஏற்கெனவே, சீனாவிடமிருந்து மாலத்தீவு 1.3 பில்லியன் டாலா் கடன் பெற்றிருக்கிறது. இப்போது மேலும் 13 கோடி டாலா் கடன் பெற்றிருக்கிறாா் அதிபா் மூயிஸ். சீனா பெரிய அளவில் பொருளாதார ரீதியாக மாலத் தீவுக்கு உதவும் என்று நினைக்கிறாா் அவா். ஜாம்பியா, இலங்கை ஆகியவற்றின் அனுபவங்களும், இப்போது பாகிஸ்தான் படும் பாடும் அதிபா் மூயிஸின் கண்களுக்குப் புலப்படவில்லை.
  • அருகில் இருக்கும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு, எங்கேயோ இருக்கும் சீனாவுடனும் துருக்கியுடனும் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உறவாடத் துடிப்பது ஏன்? இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மாலத்தீவை மாற்றத் துடிக்கும் அவருக்கு ‘மதம்’ பிடித்திருக்கிறது... வெறென்ன?

நன்றி: தினமணி (06 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories