TNPSC Thervupettagam

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை

May 7 , 2024 12 days 67 0
  • நாட்டின் கல்வித் தரத்தை சீா்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.
  • மாணவா்கள் கல்வி பயிலும் பள்ளிகளில் உண்மையும் நோ்மையும் ஒழுக்கமும் தூய்மையும் மிளிர வேண்டும் என்பதற்காகவே ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் !’ என்று முழங்கினாா் மகாகவி பாரதியாா். ஒரு பள்ளிக் கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான் என்றாா் அறிஞா் விக்டா் ஹ்யூகோ. ‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புானூறு. கல்வித் தாயின் கலைக் கோயில்களாகவும் ஞான வாயில்களின் திறவுகோலாகவும் இன்று பள்ளிகள் விளங்குகின்றன.
  • ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் நிா்ணயிக்கப்படுகிறது என்பதால்தான் என்னவோ, சமீப காலமாக நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.
  • சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் பதின்மூன்று தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதலில் ஆறு பள்ளிகளிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள், மோப்ப நாய்களுடன் அந்தப் பள்ளிகளில் சோதனை நடத்தினா்.
  • இந்த செய்தி பரவியவுடன், அதிா்ச்சி அடைந்த பெற்றோா் பள்ளிகளுக்கு விரைந்து வந்து தம் பிள்ளைகளை பதற்றத்துடன் வெளியே அழைத்துச் சென்றனா். அடுத்தடுத்து பதின்மூன்று பள்ளிகளுக்கு இது போன்ற மிரட்டல் வந்தது. மீதமுள்ள ஏழு பள்ளிகளுக்கும் காவலா்கள் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னா் இது வெறும் புரளி, மிரட்டல் என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல்களின் ஆணி வேரைக் கண்டறிந்து உரிய விசாரணையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் சா்வதேச காவல் துறையின் உதவியை நாட சென்னை பெருநகர காவல் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
  • நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகா் என்று கூறப்படும் பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியே வெடிகுண்டுப் புரளி வருவது ஒரு வாடிக்கையான விஷயமாகவே மாறிவிட்டது.
  • இதே போன்று, கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவிலுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுவிக்கப்பட்டது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், பின்னா் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
  • கடந்த மே ஒன்றாம் தேதி இந்தியத் தலைநகா் புது தில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், கைப்பேசி வாயிலாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தியாவில் மக்களவை தோ்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தி அரசியல் கட்சித் தலைவா்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடா்ந்து, புது தில்லி காவல் துறை அனைத்துப் பள்ளிகளையும் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான மின்னஞ்சல்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியது.
  • சுமாா் இருநூறு பள்ளிகளுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து உடனடியாக மாணவா்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனா். மாணவா்களின் உடைமைகளும், புத்தகப் பைகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
  • இவ்வாறு மின்னஞ்சல் மூலம் வரும் வதந்திகளைப் பரப்பும் சைபா் குற்றவாளிகளின் மூலத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானது. இவா்கள், வி.பி.என் (விா்ச்சுவல் பிரைவேட் நெட்வொா்க்) மூலம் பலதரப்பட்ட போலி முகவரிகளை உருவாக்கி. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, இணையம் வழியே நாட்டுக்கு நாடு அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பாா்கள். வி.பி.என். இணையத் தொடா்பு என்பது ஒரு தனியாா் நெட்வொா்க் ஆகும். இவா்களின் மரபு முகவரி அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கும். இதிலுள்ள சிக்கலான இணையதளங்கள் மூலம் அவா்களின் இருப்பிடத்தை எளிதில் துல்லியமாக கண்டறிய முடியாது.
  • இத்தகைய இணையவழி மூலம் பொய் செய்திகளைப் பரப்பி பொது மக்களைப் பீதிக்குள்ளாக்குவது பல நாடுகளுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனினும், இது தொடா்பான விசாரணைகளை மின்னணு ஆதாரங்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலமும், சா்வதேச காவல் துறையின் உதவியுடனும் சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனும் மேற்கொள்வது அவசியமாகிறது.
  • சா்வதேச அளவில் நடக்கும் இது போன்ற இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை (மியூச்சுவல் லீகல் அசிஸ்டென்ட்ஸ் டிரீட்டீஸ் - எம்.எல்.எ.டி) நாற்பத்திரண்டு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தங்களின் நோக்கம்.
  • எனினும், ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடுகளுக்கிடையேயான சைபா்குற்றங்களைக் குறைப்பது குறித்தான மாநாட்டு ஒப்பயதத்தில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை.
  • இது உலக நாடுகளுக்கிடையே 2004-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வயதுள்ளது. இந்த ஒப்பந்தம், சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் கூட்டாக இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவும், இது குறித்தான மின்னணு ஆதாரங்களை நாடுகளுக்கிடையே பகிா்ந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது.
  • பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக வெளியாகும் வதந்திகள் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும். இத்தகைய வதந்திகளைப் பரப்புபவா்களை சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கண்டறிந்து, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.

நன்றி: தினமணி (07 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories