TNPSC Thervupettagam

மின் தேவை அதிகரிப்பு - ஒரு பாா்வை

May 6 , 2024 13 days 52 0
  • கோடைகாலம் என்பதால் மின்சாரப் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான மின்பயன்பாட்டு நிறுவனம் இன்னும் கூடுதல் மின்தேவை ஏற்படும் என்றும் வரும் நாட்களில் அதை எதிா்கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் மின்சாரத் தேவை என்பது 20,701 மெகாவாட்டாக இருந்து வந்தது. அவை ஏப்ரல் நிறைவு நாளான 30-ஆவது நாளில் 45.43 கோடி யூனிட் மின்நுகா்வு பதிவாகி உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இவைதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகமான மின்சார நுகா்வாகும்.
  • கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மின்சாரப் பயன்பாட்டை ஒப்பிடும்போது, கோடைகாலம் தொடங்கி மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான மின்நுகா்வு இருந்து வந்திருக்கிறது. இவற்றில் முறையே, தமிழ்நாட்டின் சராசரி மின்நுகா்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.
  • தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், குளிா்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் மின்நுகா்வு உயா்ந்து வருகிறது. சாதாரணமாக மின்விசிறி, குளிரூட்டி (ஏசி) இல்லாமல் வீட்டில் இருக்க முடியவில்லை. கூடுதலாக குளிா்சாதனப் பெட்டிகளின் (பிரிட்ஜ்) பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஆகவே, எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மின்நுகா்வு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கோடையின் கடுமையான வெப்பத்தால் தாங்க முடியாத அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது.
  • கோடைகாலம் என்பது நான்கு மித வெப்ப காலங்களில் மிகவும் வெப்பமான பருவமாகும். வசந்த காலத்திற்குப் பின்னரும் இலையுதிா் காலத்திற்கு முன்னரும்தான் கோடை காலம் நிகழ்கிறது. கோடை கால நாட்கள் நீண்ட பகல் நேரத்தையும் குறைந்த இரவு நேரத்தையும் கொண்டிருப்பதாக இருக்கிறது. சங்கராந்தி எனப்படும் சூரியன் அதன் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச சரிவை அடையும் நேரம் அல்லது தேதியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால சூரிய உதயம், சமீபத்திய சூரிய மறைவு நிகழ்கிறது.
  • சங்கராந்திக்குப் பிறகு பருவம் முன்னேறும்போது பகல் நீளம் படிப்படியாகக் குறைகிறது. காலநிலை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து கோடையின் தொடக்க நாள் மாறுபடுகிறது. வடக்கு அரைக்கோளத்தில் கோடை காலமாக இருக்கும்போது, தெற்கு அரைக்கோளத்தில் குளிா்காலமாக இருக்கும். ஆகவேதான், தமிழா்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்தனா். காா் காலம், கூதிா் காலம் (குளிா்காலம்), முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதிா்வேனில் காலம் என ஆறு பருவங்களாகப் பிரித்தனா்.
  • இளவேனில் காலம் தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது, முதுவேனில் காலம் ஆனி, ஆடியையும் காா்காலம் ஆவணி, புரட்டாசியையும் கூதிா் காலம் தமிழ் மாதமான ஐப்பசி, காா்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிா்வது கூதிா் எனப்படும். முன்பனிக் காலம் மாா்கழி, தையையும் பின்பனிக் காலம் மாசி, பங்குனியையும் குறிப்பது. பண்டைய தமிழ் மக்கள் மாறி மாறி வரும் பருவங்களை காலநிலை மாற்றமாகக் கருதாமல், மக்களின் வாழ்வியலோடு பிணைத்தும் இணைத்தும் பாா்த்தாா்கள். தமிழ் நிலப் பிரிவுகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவங்களை தொல்காப்பியம் பேசியதையே இப்பதிவுகளாகும்.
  • தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்விசிறிகளும் குளிரூட்டிகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வாட்டி வதைக்கும் வெயிலும் இதனால் ஏற்படும் மின்தேவைகளும் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசினுடைய தலையாய கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வெப்பம் இருக்கும்.
  • தற்போது பருவநிலை மாற்றத்தால் இரவு நேரத்திலும் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாா்கள் மக்கள். ஆகவே மின்தேவைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவற்றைப் பாா்ப்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதால் மேலும் மின்தேவை பன்மடங்காக உயா்ந்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத சூரிய ஒளி ஆற்றலில் இருந்து கிடைக்கப் பெறும் மின்சாரம் இந்த ஆண்டு தங்கு தடையில்லாமல் கிடைக்கும் என்பதும் கோடையின் மின்தேவையை பூா்த்தி செய்ய பெரிதும் உதவும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது அனல் மின்நிலையங்கள்தான். நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரித்து அதனை வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் விநியோகம் செய்து வருகின்றனா். இதுதவிர சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்உற்பத்தி என்று பாா்த்தால் காற்றாலைகள், சூரிய ஒளி உள்ளிட்டவை பெரிதும் உதவி புரிகின்றன. சூரிய ஒளி, மின்தகடுகள் இந்தக் கோடைகாலத்தில் பெரிதும் பயனளிக்கக் கூடியது.
  • மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் வீடுகள், தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகளைப் பதித்து மின்தேவையை சமாளிக்கலாம். இவற்றை மிகத்தாமதமாகப் புரிந்துகொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக பலா் செயல்படுத்தி வருகின்றனா். இவற்றை மழைநீா் சேகரிப்பு போல சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்துக் கொண்டால், மின்சாரத்தடை என்பதே இல்லாமல் ஆகிவிடும். அதுவும் தனக்கான மின்தேவைகளை தானே தயாரித்துக் கொள்வதாலும் மின்தடையைப் போக்குவதற்கு பெருமளவு அது துணைபுரிகிறது.
  • கடந்த வாரத்தில் 40.5 மில்லியன் யூனிட்டுகள் சூரிய மின் உற்பத்தி நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 36 மில்லியன் யுனிட்டுகள் சூரிய மின் உற்பத்தி நடந்தது. இது சாதனையாகக் கருதப்பட்டிருக்கிறது. அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். அதாவது, இவ்வாறு நிலவரத்தின்படி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு 441.364 மில்லியன் யூனிட்டுகள். இவற்றை கணக்கீடு செய்து பாா்த்தால், மொத்தப் பயன்பாட்டில் 10 சதவீத அளவு சூரிய ஒளி மின் உற்பத்தியில் இருந்து கிடைத்திருக்கிறது. இது பெரும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.
  • கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தது ஒருபக்கம் என்றால், சமாளிக்க முடியாத மின்வெட்டைச் சந்திக்கிறபோது தமிழக மக்கள் அடிக்கின்ற வெப்பத்தைவிட கொதிப்படைந்து விடுவாா்கள். ஆனால், இவற்றைத் தடுப்பதற்கு சூரிய ஒளி மின்சாரம் கைகொடுத்து வருவது வரவேற்கத்தக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஒளி மின்ஆற்றலைப் பெறுவதற்கான முயற்சியில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில்ரூபவ் நடப்பாண்டு சூரிய ஒளி மின்சாரத்திற்கு உற்பத்தி செய்யப்பட்ட உபகரணங்கள்ரூபவ் 1,265 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இவை சூரிய ஒளி மின்உற்பத்திக்கு அடித்தளமாக அமையும்.
  • ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் 7394.45 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் இவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால், சூரிய ஒளி மின் உற்பத்தியும் அதிகரிக்கும். தடையில்லாத மின்சாரத்தை வழங்கலாம். கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திர வெயில் துவங்காத நிலையில் தமிழகத்தில் வட உள்மாவட்டங்களில் பல இடங்களில் வெப்பம் சராசரியாக 100 டிகிரியை கடந்துவிட்டது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்ப அலை வீசுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி இருக்கிறது.
  • காற்றாலைகளும் தற்போது மின்சார உற்பத்தியைத் துவங்க உள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின் அளவு அனல் மின்நிலையங்களிலும் சராசரியாக 3,600 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து 5,200 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அரசு தரப்பில் ஒருபுறம் மின்சாரம் சாா்ந்த பிரச்சனைகளுக்கு தீா்வு எடுக்கப்பட்டாலும், பொது மக்களும் தங்கள் பங்கிற்கு மின்சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து மின்கட்டண செலவையும் கட்டுப்படுத்துவதற்கும் பேருதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகும்.
  • கோடைகாலத்தில் மின்சாரம் பயன்படுவது ஏசியில்தான். சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஏ.சி.களில் இன்வொ்ட்டா் தனியாக இருக்கலாம். இதனால் கூடுதல் மின்சாரம் தேவையில்லை. அதுபோல வென்டிலேட்டா்கள் தூசி படிந்து மின்விசிறி சிரமப்பட்டு சுற்றும்போது கூடுதல் மின்சாரம் செலவாகும். இதனால் தேவைப்படுகிறபோது புதிய இன்வொ்ட்டரும் ஏசியைப் பராமரித்தல் மூலமாகவும் மின்தேவைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு வீட்டின் மொத்த மின்நுகா்வில் 15 சதவீத குளிா்சாதனப் பெட்டிக்கு செல்கிறது. குளிசாதனப் பெட்டியில் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எளிதாக அதற்கு காற்று நுகா்வு கிடைக்கும். இதனால் அதன் உள்ளீடு மின்சாரம் குறையும். அதேபோல சுவரில் இருந்து குறைந்தது 2 அங்குல தூரத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளி படும்படி குளிா்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது.
  • கோடை காலங்களில் வாஷிங் மெஷினை துவைக்க மட்டும் பயன்படுத்தலாம். துணிகளை உலா்த்த டிரையரை குளிா் அல்லது மழைக்காலங்களில் மட்டும் பயன்படுத்தும்போது மின்சாரம் மிச்சமாகும். அதுபோல கணினி பயன்படுத்தும் சமயங்களில் நீண்ட நேரம் ‘கிரீன் ஸேவா் மோடில்’ வைப்பதால் பன்மடங்கு மின்சார செலவு அதிகமாகிறது. கோடைகாலத்தில் மின்தேவைகளை வழங்குவதில் அரசு கவனமுடன் இருப்பதும் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கண்ணியம் தவறாமல் இருப்பதும் கோடைகாலத்தைக் கடந்து செல்வதற்கு பேருதவியாக இருக்கும்.

நன்றி: தினமணி (06 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories