TNPSC Thervupettagam

வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு

April 16 , 2024 14 days 80 0
  • இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் தொழில்நுட்ப நிகழ்வாகச் செயற்கை நுண்ணறிவு மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் வரவு குறித்த அச்சங்கள் மெல்ல அகன்று, அதன் பயன்பாட்டை அறியும் ஆர்வம் இப்போது அதிகரித்திருக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவுடன் பயணித்துத் தான் பார்ப்போம் என அத் தொழில்நுட்பத்தைப் பலரும் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, உலக நாடுகளில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் தாக்கம் ஆழமானது. கற்றல், கற்பித்தலில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
  • வழிகாட்டும் ஏஐ: பள்ளிகளில் மாணவர்களின் பலம், பலவீனத்தைக் கண்டறிந்து எந்தப் பாடத்தில் அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி வேண்டும், அப்பயிற்சி எந்த முறையில் அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கற்றல் வழிமுறை களைச் செயற்கை நுண்ணறிவு சொல்கிறது. மேலும், தனிப்பட்ட கற்றல் திறன்களை மாணவர்களிடம் அடையாளம் காண்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
  • காது கேட்காத, பேச முடியாத மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம். அந்தச் சிக்கல்களைக் குறைக்கவும், வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் முறையை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கிறது. “எங்க பள்ளிக்கூடத்துல. ஒரு ரோபாட் டீச்சர் இருக்காங்க. நாங்க கேட்கிற கேள்விகளுக் கெல்லாம் சரியா பதில் சொல்வாங்க.” எனப் பெற்றோரிடம் தங்கள் அனுபவத்தைப் பள்ளி மாணவர்கள் பகிர்கின்றனர். இவ்வாறு வழிகாட்டும் ஆசிரியராகவும் பிழை களைச் சுட்டிக்காட்டும் நண்ப னாகவும் செயற்கை நுண்ணறிவு ரோபாட்கள் பள்ளிகளில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.
  • மெய்நிகர் உண்மை: பாடங்களில் இடம்பெறும் வரலாற்று இடங்கள், போர்கள், விண்வெளி ஆராய்ச்சி களை மெய்நிகர் உண்மை (வெர்ச்சுவல் ரியாலிட்டி) வழியே காட்சிப்படுத்துவதன் மூலம் பாடங்களை மாணவர்கள் எளிமையாக உள்வாங்கிக் கொள்கின்றனர். இதனால் சிறந்த கற்றல் அனுபவத்தை மாணவர்கள் பெறுகின்றனர்.
  • அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ‘கிரியேட்டிவ் டெக்னாலஜீஸ்’ அமைப்பு, அண்மையில் ராணுவ வீரர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் ராணுவப் பயிற்சிகளைப் படித்துப் புரிந்து கொள்வதைவிட, பாவனை செய்தல் (simulation) மூலம் ராணுவ வீரர்கள் விரைவாகக் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவந்துள்ளது. உருவகப்படுத்தல் முறையில் ஆசிரியர் - மாணவர்களுக்கிடையே உரையாடல்கள் அதிகரித்து, தயக்கம் குறைவ தாகவும் துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • ஆசிரியர்களுக்கு.. மாணவர் - ஆசிரியர் இடையேயான கற்றல் வழிமுறைகளைத் தொழில்நுட்பத்தால் என்றும் ஈடுசெய்ய முடியாது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கு மாற்றாக ஏ.ஐ. ஒருபோதும் இருக்கப் போவதில்லை. எனினும் ஆசிரியர் களின் பணிகளை ஏ.ஐ. எளிதாக்கும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தும்போது, மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதனால், ஆசிரியர்கள் கற்பித்தலுக்காகக் கூடுதல் நேரம் செலவிட முடியும்.
  • பிற நாடுகளில்: ஏ.ஐ.யின் துணை கொண்டு மாணவர் களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையில் சீனா பிற நாடுகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டுவருகிறது. தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஏற்ப சீனா தனது வகுப்பறைகளை வடிவமைத்துள்ளது.
  • சீனாவின் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்கள் பாடங்களை முறையாகக் கவனிக்கிறார்களா என்பதை அறிய ‘ஹேர் பேண்ட்’ வடிவில் கருவி ஒன்று பொருத்தப் படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவு ஒருமுகப்படுத்தி பாடங்களைக் கவனிக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை ஆசிரியர்கள், பெற்றோருக்கு வழங்குகிறது.
  • வகுப்பறைகளில் ரோபாட்கள் மூலம் மாணவர்களின் உடல்நலனும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ‘SquirrelAI’ என்கிற நிறுவனம் சீனாவில் பெரும்பாலான பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கியுள்ளது. சீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஏதோ ஒரு வடிவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • சீனா தவிர்த்து சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, கனடா, கொரியா, பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா போன்ற நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் பள்ளியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொள்கைகள், வழிகாட்டுதல்களை வடிவமைத்துள்ளன.
  • சவால்கள் என்ன? - செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தனி நபர்களின் தரவுகள் திருடப்படுவது இதிலிருக்கும் முக்கிய சவால். இதைத் தவிர்க்க, தரவு தகவல்கள் பாதுகாக்கப்படுவதைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். கற்றலுக்குத் தொழில் நுட்பத்தையே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டால் தனித்துச் செயல்படுவதிலும், தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுப்பதிலும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் விலையுயர்ந்ததாக இருப்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கைகளில் இது சென்று சேருமா என்கிற கேள்வி எழுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் இத்தொழில்நுட்பம் சென்றடையாத நிலையில் கல்வி சார்ந்து மாணவர்களிடம் இடைவெளி உண்டாகலாம்.
  • ஆண்டாண்டாகத் தொடரும் பாரம் பரியக் கல்வி நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தைப் புகுத்தி வருகிறது. இம்மாற்றங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேநேரத்தில் சில சரிவுகளை யும் ஏற்படுத்தலாம். இதனை உள்வாங்கியே இத்தொழில்நுட்பத்தை நாம் ஏற்க ஆயத்தமாக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories