- இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில், பிரசவ அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துவருவதாக இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி. சென்னை) நடத்தியிருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்விஷயத்தில் மருத்துவ விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்த ஆய்வில் அரசு ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- ஐந்து ஆண்டு காலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, சமூக – பொருளாதார நிலைமை ஆகியவை முக்கிய அம்சங்களாகக் கொள்ளப்பட்டு, இவற்றில் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் தமிழ்நாடும் சத்தீஸ்கரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
- சத்தீஸ்கருடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இருப்பதால் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளை அணுகுவோரின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்படவில்லை. 2016ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021இல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை 0.3% அளவுக்கே குறைந்துள்ளதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 தெரிவிக்கிறது.
- பொதுச் சுகாதாரக் கட்டமைப்பும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் சத்தீஸ்கரில் 84.3% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
- ய் - சேய் இருவரது பேறுகால நலன், பிரசவ நேரச் சிக்கல்கள், குழந்தையின் ஆரோக்கியம் எனப் பல காரணங்கள் சிசேரியனுக்குக் காரணமாக அமைகின்றன. தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5இன்படி இந்தியாவில் பிரசவ நேரச் சிக்கல்கள் 42.2%இலிருந்து 39.5%ஆகக் குறைந்துள்ளன.
- இருந்தபோதும் 28 மாநிலங்களில் நடைபெறும் சிசேரியன்களின் எண்ணிக்கை, உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அதிகபட்ச அளவான 15%க்கும் அதிகமாக இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. உலக அளவில் 20%க்கும் அதிகமான சிசேரியன்கள் நடைபெறுவதாகவும் இது 2030இல் 30%ஐத் தொட்டுவிடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கவலைதெரிவித்துள்ளது.
- தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பிரசவ நேரச் சிக்கல்களின் எண்ணிக்கை குறைவு (30.7%). ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை மிக அதிகம் (64.2%).
- அரசு மருத்துவமனைகளில் சுகாதாரக் கட்டமைப்பு மேம்பட்ட நிலையில் இருக்கும்போது ஏன் இந்த நிலை? தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, கல்வியறிவு, பெண்களின் தனிப்பட்ட விருப்பம் போன்ற பல்வேறு காரணிகள் இதைத் தீர்மானிக்கின்றன என்கிறது ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வு.
- சத்தீஸ்கரில் செல்வந்தர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை அணுக முடியும் என்கிற சூழலில், தமிழகத்தில் இந்த நிலை தலைகீழாக இருக்கிறது. 63% ஏழைகள் இருக்கும் சத்தீஸ்கரைவிட 17.2% ஏழைகள் இருக்கும் தமிழ்நாட்டில்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் 73% பெண்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இது செல்வந்தர்களைவிட (64%) அதிகம்.
- அரசு மருத்துவமனைகளின் சுகாதாரமற்ற தன்மை, மருத்துவப் பணியாளர்களின் போதாமை போன்றவையும் தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடுவதற்குக் காரணம். தனியார் மருத்துவமனைகளில் சிசேரியனுக்கும் இயல்பான பிரசவத்துக்கும் கட்டணத்தில் பெரும் வேறுபாடு இல்லாத நிலையில், நேரத்தையும் வலியையும் குறைக்க சிசேரியனைப் பலர் தேர்வுசெய்கிறார்கள். மருத்துவக்காரணங்கள் தவிர்த்து, தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கட்டண வசூலுக்காகவும் நடைபெறும் சிசேரியன்களை அரசு தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 04 – 2024)