TNPSC Thervupettagam

உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்போம்

March 16 , 2023 11 days 44 0
 • முந்தைய காலங்களில் வயல்வேலை, தச்சுவேலை, கட்டுமான வேலை என்று பல வேலைகளையும் மக்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த செய்துகொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்குக் காலம் வெகுவாக மாறியுள்ளது. விவாசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் இயந்திரங்களின் ஆதிக்கம் கூடியுள்ளது. இதனால் பலநாட்கள் செய்யவேண்டிய பணிகளை ஓரிருநாட்களில் செய்து முடித்துவிட முடிகிறது. இதன் காரணமாக ஓரளவுக்கு ஓய்வென்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது
 • கணினியை வங்கிகளில் பயன்படுத்தத் தொடங்கியபோது மனிதர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று வாதிட்டனர். அன்றைக்கு அது சரியெனவே தோன்றியது. ஆனால் இன்றைக்கு கணினியில்லாத பொதுத்துறை நிறுவனங்களைக் காண இயலுமா? எல்லா இடங்களிலும் இயந்திரங்களையும், கணினியையும் ஈடுபடுத்துவது மனிதர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைத்துள்ளது.
 • முன்பெல்லாம் அயல்நாடுகள் சென்றால் அங்கிருக்கும் அகலமான சாலைவசதிகளை பிரமிப்பாகப் பார்ப்போம். ஆனால் இன்றைக்கு இந்தியாவிலேயே அகலமான சாலைகள் காணக்கிடைக்கின்றன. பல நூற்றாண்டுகளில் நடைபெற்ற பண்பாட்டுப் பரிமாற்றங்கள் சில நொடிகளில் காணொலிகள் மூலம் காணக்கிடைக்கின்றன.
 • இன்றைக்கு கிராம வாழ்க்கைக்கும் நகரவாழ்க்கைக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. மனிதர்களின் உணவு முறைகளிலும் மாவுச் சத்து மிகுந்த உணவை உண்ணும் போக்கு அதிகரித்துவருகிறது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்ளாமல் இல்லை. உடலுழைப்பின் மூலம் உண்ணும் உணவு செரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. கொழுப்பாய் மாறும் மாவுச்சத்துகள் எரிந்து கரைவதும் நடைபெற்றுவந்தது.
 • ஆனால் இன்று கடினமான உடலுழைப்பில்லாத நிலையில் உடற்பயிற்சிக்கான தேவை அதிகமாகியுள்ளது. இயந்திரமயமாக்கல் மூலம் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை எந்த அளவுக்கு உடலுழைப்போடு இணைக்க வாய்ப்புள்ளதோ அந்த அளவுக்கு உடலில் சேரும் கொழுப்பு கரையும். ஆனால் பலருக்கும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வில்லாமையால் அவர்களின் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சியிலும், கைப்பேசியிலும் கரைகிறது.
 • உடல்நலனைப் பராமரிக்க இயலாதோர்க்கு உடலியல் செயல்பாடுகள் பாதிக்கபட்டு அவர்கள் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்கள் அடுத்தடுத்த குறைபாடுகளுக்கு இட்டுச் செல்கின்றன. உண்ணுதலைப் பொறுத்தவரை புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகள், நுண்ணூட்டங்கள் போன்றவற்றை இணைத்து சமச்சீரான உணவை உட்கொள்ளும் தேவை இன்று உள்ளது.
 • இன்றைக்கும் உடலுழைப்பு தேவைப்படும் தொழில்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வாறு அளவுக்கதிகமாக உடலுழைப்பைச் செலுத்துவோர், அளவுக்கதிகமான உடல் வலியை சமாளிக்கிறோம் என்று கூறி மது அருந்தும் போக்கும் உள்ளது. இவ்வாறு உடல் களைப்பைப் போக்கத் தொடங்கும் பழக்கம் பின்னர் வழக்கமாகி அளவுக்கதிகமாகக் குடித்து அதற்கு அடிமையாகும் வரை செல்கிறது.
 • குடி என்னும் நோயால் பாதிக்கப்படுவோர் அதிலிருந்து மீள்வது மிகப்பெரிய கேள்விக்குறியே. அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிவதற்குள் தங்கள் குடும்பத்தையே பெரும் கடனுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கி விடுகின்றனர். இவற்றைக் காணும் இளையோர் இதிலிருந்து பாடம் கற்பதற்குப் பதில் அவர்களது வழியையே தாங்களும் பின்பற்றுகின்றனர். மதுவுக்கு இணையாக இல்லாவிடினும் சிகரெட், புகையிலை போன்றவற்றின் பயன்பாடும் உடல்நல சீர்கேட்டிற்கு இட்டுச்செல்லும்.
 • குழந்தைகள், பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை உண்ணும் போக்கும் அதிகரித்து வருகிறது. அந்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகமிருப்பது உலகறிந்த உண்மை. பல நாட்கள் கெடாமலிருக்க இப்பண்டங்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதும் நாம் அறிந்ததே. இவற்றை அளவுக்கதிகமாகத் தின்று ஓடியாடி விளையாடாமல் வளரும் குழந்தைகள் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இளைய வயதிலேயே ஏற்படும் உடல் பருமன் அவர்களின் வாழ்நாள் தொந்தரவாகத் தொடரவும் வாய்ப்புள்ளது.
 • இந்நிலையில் ஒவ்வொரு நாளின் பயன்பாட்டையும் ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுமார் 10 மணி நேரம் தூக்கம், காலைக்கடன், குளியல் உள்ளிட்ட பணிகளில் கரைகிறது. மீதமுள்ள 14 மணி நேரத்தில் எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் வாழ்வாதாரத்திற்கான பொருளை ஈட்ட ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள ஆறு மணி நேரத்தில் பணியிடத்திற்கு செல்வது திரும்புவது என்ற ரீதியில் மூன்று மணி நேரம் செலவாகும் எனஎடுத்துக்கொள்வோம்.
 • மீதமுள்ள முன்று மணி நேரத்தில் நமது உடலைப் பராமரிக்க எவ்வளவு நேரத்தை செலவழிக்க முடியும் என்று திட்டமிட வேண்டியுள்ளது. விழிப்புணர்வு பெற்றோரில் பலர் காலை, மாலை நேரங்களில் இந்த நேரத்தினை உடற்பயிற்சிக்காக செலவழிக்கின்றனர். இதனால் தாம் வாழ்நாளை அதிகரித்துக்கொள்கின்றனர். திருமூலர் சொன்னதைப்போல உடம்பை வளர்ப்பதோடு உயிரையும் வளர்க்கின்றனர்.
 • உடலோம்பல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இன்றைய அவசரத் தேவை. தனிமனிதர் ஒருவர் எந்த அளவுக்கு தன் உடல் நலனைப் பற்றிய கவலையோடு வாழ்கிறாரோ அந்த அளவிலேயே அவருக்கு மனநலமும் வாய்க்கும். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பும் கிடைக்கும். வாழ்வியல் முறைகளை தனிநபர் ஒழுங்காக மட்டும் பார்க்காமல் சமூக ஒழுங்காகப் பார்க்கும் பார்வை மேம்படுவது நாட்டுக்கு நல்லது; வீட்டுக்கும்தான்.

நன்றி: தினமணி (16 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories